கோவை அருகே டேங்கர் லாரி, கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
கேரளா மாநிலம் திருச்சூரில் இருந்து ஓட்டுநர் உட்பட 8 பேர் நேற்று கோவை விமான நிலையம் நோக்கி எல்.என்.டி பைபாஸ் சாலை வழியாக காரில் வந்து கொண்டிருந்தனர். விடுமுறையை கொண்டாட விமானம் மூலம் வெளிநாட்டுக்கு செல்வதற்காக அவர்கள் வந்து கொண்டிருந்ததாக தெரிகிறது. எல்.என்.டி பைபாஸ் சாலையில் உள்ள செட்டிபாளையத்தை அடுத்து அங்குள்ள சுங்கச்சாவடி அருகே வந்த போது, எதிரே எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி, கார் மீது மோதியது.

இதில் காரில் வந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றவர்கள் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த செட்டிபாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களில் ஒருவர், அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லும் வழியில் உயிரிழந்தார். மற்ற மூன்று பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் பெயர், விவரம் உடனடியாக தெரியவில்லை. இச்சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.