சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மாணவிகள் வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும்போது அவர் ஏமாற்றுபவராக இல்லாமல் ஏற்றம் தருபவராக இருக்க வேண்டும் என கூறினார்.
அந்த நிகழ்வில் அவர் பேசியதாவது, 'கிடைப்பதை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு அதில் முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டு அதன் மூலம் நமது பணியை ஆற்றி அதற்குப் பின்பு பல படிகளில் ஏறிக் கொண்டே போக வேண்டுமே தவிர எதற்கும் தயங்கி கீழேயே நின்று விடக்கூடாது.நட்பை வளர்த்துக்கொள்ளுங்கள் மகிழ்ச்சியாக இருங்கள். எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். இப்பொழுதெல்லாம் கல்வி கற்கிறார்கள், விரும்பிய வேலைக்காக ஓடுகிறார்கள் ஆனால் குடும்ப வாழ்க்கையை மறந்து விடுகிறார்கள் இளைஞர்கள் பெண்களெல்லாம் இன்று 30, 35 வயதில் தான் வயதிற்குப் பிறகுதான் திருமணத்தைப்பற்றிய சிந்திக்கிறார்கள். ஒரு மருத்துவர் என்ற முறையில் சொல்கிறேன். எப்படி நீங்கள் கல்வியை வளர்த்துக் கொள்கிறீர்களோ அதேபோல் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவதும் சரியான நேரத்தில் தாய் தந்தையர் சொல்வதைக் கேட்டு அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். 'தாய் சொல்வதையும் கேட்டு' என்ற உடனே தமிழிசை காதல் திருமணத்திற்கு எதிரானவர் என்று ஒரு பதிவு இன்னேரம் வந்திருக்கும். நாமே தேர்ந்தெடுக்கலாம் ஆனால் அப்படி தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நமக்கு உரியவர்களாக, ஏமாற்றுபவர்களாக இல்லாமல் ஏற்றவர்களாக... தாய் தந்தை ஏற்றுக்கொண்டு அதன் மூலம் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்'' என்றார்.