முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் சிறுமிக்கு விரைவில் அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த வீராபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஸ்டீபன்ராஜ்- சௌந்தர்யா தம்பதியினர். இவர்களது 9 வயது மகள் தான்யா, வீராபுரம் அரசு பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மூன்று வயது வரை சராசரி குழந்தையாக இருந்த தான்யாவின் கன்னத்தில் கரும்புள்ளி ஒன்று தோன்றியது. இதனை ரத்த கட்டி எனப் பெற்றோர்கள் சாதாரணமாக எடுத்துக் கொண்ட நிலையில், நாளடைவில் அந்தப் புள்ளி பாதி முகத்தை சிதைக்கும் அளவிற்கு உருவானது. உடனே பெற்றோர் எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தனர். இருப்பினும் நாளுக்குநாள் அதிகரித்த பாதிப்பு அவரது கண், கன்னம், வாய் என முகத்தின் பாதியைச் சிதைத்துவிட்டது. தங்களது சக்திக்கும் மீறி பல இடங்களில் கடன் வாங்கி தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைகளை தொடங்கிய நிலையில் அதுவும் கைகொடுக்கவில்லை. பள்ளி செல்கையிலும், டியூசன் செல்கையிலும் சிறுமி தான்யாவை சக மாணவர்களே ஒதுக்கி வைப்பது தான்யாவிற்கு மனச்சுமையை ஏற்படுத்தியது. இதனால் வீட்டிற்கு வந்தவுடன் அழுவதாக சிறுமியின் தாய் சௌந்தர்யா தெரிவிக்கிறார். எப்படியாவது எங்கள் குழந்தையை அரசு மீட்டுத்தர வேண்டும். மற்ற குழந்தைகளைப் போல எங்கள் குழந்தையும் இருக்க வேண்டும். அதற்கு முதல்வர் உதவ வேண்டும் என தான்யாவின் பெற்றோர் கண்ணீருடன் கோரிக்கை வைத்திருந்தனர். மேலும் குழந்தையின் முகம் இப்படி இருப்பதால் குடியிருக்க வீடு கூட கிடைக்கவில்லை. கிடைத்தாலும் வீட்டு உரிமையாளர்கள் காலி செய்ய சொல்கிறார்கள். அதனால் பல வீடுகள் மாறிவிட்டோம் என வேதனை தெரிவித்திருந்தனர்.
தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து சிறுமி தான்யா தெரிவிக்கையில், ''பிரெண்ட்ஸ்ங்க கூட வெறுக்குறாங்க. உனக்கு இந்த மாதிரி கன்னம் இருக்கு நீ இங்க வந்து உட்காரக்கூடாது. நீ லாஸ்ட்ல போய் உட்காரு'னு சொல்வாங்க. கடைசி பெஞ்ச் இருக்கும் அங்கதான் நான் போய் லாஸ்ட்ல உட்காருவேன். புக்கு கூட எடுத்துட்டு வந்து கைல தரமாட்டாங்க டேபிள் மேலதான் வைப்பாங்க. முதலமைச்சர் ஐயா எனக்கு கன்னம் இப்படி இருக்குறதால யாருமே பேசமாட்றாங்க. எனக்கு நீங்க சரிபண்ணி தாங்க. எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு'' என்றார் ஏதுமறியா மழலை குரலில்.
இதனைத்தொடர்ந்து தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவமனையில் முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி தான்யாவிற்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும், சிறுமியின் குடும்பத்திற்கு வீடு ஒதுக்கீடு செய்ய இருப்பதாகவும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் குறிப்பிட்ட அந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் சிறுமிக்கு வரும் திங்கட்கிழமை அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.