தலை ஆடியன்று வீட்டுக்கு வீடு உற்சாகமாகக் கொண்டாடப்படும் தேங்காய்ச் சுடும் பண்டிகை, இந்த ஆண்டு கரோனா ஊரடங்கால் வழக்கத்தை விட உற்சாகம் குறைந்து காணப்பட்டது.
ஆடி மாதத்தின் முதல் நாளை, தலை ஆடி பண்டிகையாக ஹிந்துக்கள் காலங்காலமாக கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில், புதுமணத் தம்பதியினர், தலை ஆடி தினத்தன்று காவிரி, வைகை, பாலாறு உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடுவது வழக்கம். மணமான பெண்கள், புதுத்தாலி அணிந்து கொள்ளும் சடங்குகளும் நடைபெறும்.
இதுமட்டுமின்றி, வீடுகளின் முன்பு தீ மூட்டி, தேங்காய்ச் சுடும் பண்டிகையும் தலை ஆடியன்று விமர்சையாகக் கொண்டாடப்படும். தமிழகத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, கரூர் உள்ளிட்ட கொங்கு மண்டல பகுதிகளுக்கே உரித்தான விழாவாக தேங்காய்ச் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
முற்றிய தேங்காயைத் தேர்வு செய்து வாங்கி, முக்கண்களில் ஒரு கண்ணில் மட்டும் துளையிட்டு அதில் உள்ள நீரை வெளியேற்றுகின்றனர். அந்தத் துளையின் வழியே ஊற வைத்த பச்சை அரிசி, நாட்டு சர்க்கரை, பாசிப்பருப்பு, பொட்டுக்கடலை, எள் ஆகியவற்றை முழுதாகவோ அல்லது அரைத்தோ போடுகின்றனர். தேங்காயில் இருந்து தனியாக எடுத்து வைத்த நீரும் அதில் ஊற்றிய பிறகு, துளையில் நீளமான அழிஞ்சி மரக்குச்சி அல்லது மூங்கில் குச்சியை சொருகி, தீயில் சுட்டு எடுக்கின்றனர்.
தேங்காய்க்குள் இட்ட பூரணம் வெந்த பிறகு கிளம்பும் வாசனையைக் கொண்டு தேங்காயும் பதமாக வெந்ததாக அறிந்து கொள்கின்றனர். பின்னர், தீயில் சுட்ட தேங்காயை கடவுள் முன்பு படையிலிட்டு, அதன் பிரசாதத்தை குடும்பத்துடன் உண்டு மகிழ்கின்றனர். வாழ்வில் எல்லா நாளும் மகிழ்ச்சியும், இன்பமும் பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு, கிராமங்களில் கூட இப்பண்டிகை பெரிய அளவில் உற்சாகமாகக் கொண்டாடப்படவில்லை. பரவலாக வீடுகள் அருகே தீமூட்டி தேங்காய்ச் சுட்டனர். முன்னெச்சரிக்கையாக முகக்கவசம் அணிந்து தேங்காய் சுடும் விழாவைக் கொண்டாடினர்.
வழக்கமாக, தலை ஆடியையொட்டி அதிகாலை முதலே மலர்ச்சந்தை முதல் காய்கறி, பழங்கள், மளிகைப் பொருள்கள் என வியாபாரம் களைகட்டும். மேட்டூர், மோகனூர் உள்ளிட்ட காவிரி ஆறுகளில் புதுமணத்தம்பதிகள் முதல் இளைஞர்கள் வரை நீராட குவிவதும், அங்குள்ள கோயில்களில் வழிபடுவதுமாகக் கூட்டம் நிரம்பி வழியும்.
கரோனா ஊரடங்கால் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மற்றும் பேருந்து போக்குவரத்து வசதிகள் இல்லாததாலும் மேட்டூர் காவிரி ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடியும் புனித நீராட புதுமணத்தம்பதிகளோ, இளைஞர்கள் கூட்டமோ இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. கிராமங்களில் சிறு கோயில்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால், அங்கு மட்டும் ஓரளவு பக்தர்கள் வழிபாடு நடந்தது. மாநகர பகுதிகளில் கோயில்களில் வழிபடத் தடை நீடிப்பதால் பக்தர்கள் வீடுகளிலேயே விளக்கேற்றி வழிபட்டனர்.