‘மின்னகம்’ மின் நுகர்வோர் சேவை மையம் தொடங்கப்பட்டு இன்றோடு ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று அண்ணா சாலை மின்சார வாரிய அலுவலகத்தில் உள்ள மின்னகம் மையத்தை நேரில் ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “முதலமைச்சரால் தமிழக மின் நுகர்வோர்களுடைய குறைகளை நீக்கக்கூடிய வகையில், புகார்களுக்கு தீர்வு காணும் வகையில் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் கடந்த 20.06.2021 அன்று தொடங்கப்பட்டது. இந்த மின்னகம் மின் சேவை மையம் இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது. இந்த ஓராண்டில் மின்னகத்தின் மூலம் 9,17,572 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. 9,12,599 புகார்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. 99.45 விழுக்காடு புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வுகள் காணப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பல்வேறு ஆய்வுப் பணிகளின்போதும், பயணத்தின் போதும் பொதுமக்களும், தொழில் முனைவோர்களும் என்னிடம் சொல்வது மின்னகம் ஒரு பயனுள்ளதாக சிறப்பாக அமைந்துள்ளது; எனவே முதலமைச்சருக்கு உங்கள் மூலம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று வரவேற்பை மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறார்கள். வரக்கூடிய ஆண்டுகளில் சிறப்பாக சேவைகளை செய்வதற்காக பல்வேறு முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. செயலி மூலமாக புகார்களை தெரிவிக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தற்போது மொத்தம் 60 அழைப்புகளை ஏற்கும் வசதி உள்ளது. 61வது அழைப்பு தான் காத்திருப்புக்கு செல்லும். ஆனால், செயலி அறிமுகப்படுத்திய பிறகு இப்படி எண்கள் அல்லாமல் மக்கள் அனைவரும் தங்கள் புகார்கள் உடனடியாக தெரியப்படுத்தலாம்” என்று தெரிவித்தார்.