பழனி மலை அடிவாரத்தில் உள்ள பிரபல பஞ்சாமிதம் விற்பனை செய்யும் கடைகளான சித்தனாதன் மற்றும் கந்தவிலாஸ் கடைகளில் மூன்று நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் 50 பேர் சோதனையில் ஈடுபட்டனர். சித்தனாதன் மற்றும் கந்தவிலாஸ் கடையின் உரிமையாளாகள் முறையாக வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்க்கு புகார்கள் சென்றதை அடுத்து கடந்த சில மாதங்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த இரண்டு நிறுவனங்களின் நடவடிக்கைகளையும் தீவிரமாக கண்கானித்துவந்துள்ளனர்.
இந்தநிலையில் வருமான வரித்துறை உயர்அதிகாரி சாஜி கிருஸ்டோபர் தலைமையில் திடிரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கினர். பழனிமலை அடிவாரத்தில் உள்ள சித்தனாதன் பஞ்சாமிர்த கடை, வீடு, தோட்டம், குடோன், தொழிற்சாலைகள் என இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் 30 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மூன்று நாட்களாக சோதனை நடத்தினர். சோதனையில் வருமான வரித்துறை அதிகாரிகளே அதிர்ச்சியடையும் அளவிற்கு கோடிக்கணக்கான ரூபாய் பணம், கிலோ கணக்கில் தங்க நகைகள் மற்றும் ஏராளமான சொத்து ஆவணங்கள் சிக்கியுள்ளது.
கைப்பற்றிய நகைகள், பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் குறித்து சென்னையில் உள்ள வருமான வரித்துறை உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சித்தனாதன் பஞ்சாமிர்த கடையின் உரிமையாளராக பதிவு செய்யப்பட்டுள்ள அசோக்குமாரிடமும் குடும்ப உறுப்பினர்களான சிவனேசன், தனசேகரன், பழனிவேல், ரவி, செந்தில் என 100 பேரிடம் தனித்தனியாக விசாரணை நடைபெற்றுள்ளது. மலை அடிவாரத்தில் உள்ள கடையை பிரதானமாக கொண்டு சித்தநாதன் குடும்பத்தினர்கள் பஞ்சாமிர்த விற்பனை செய்யும் தொழிலை நடத்திவந்துள்ளனர். கடையில் நாள்தோறும் குறைந்தபட்சம் இரண்டு லட்சம் ரூபாய் அளவிற்கும், திருவிழா காலங்களில் நாள் ஒன்று 50 லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் நடைபெறும் நிலையில், விற்பனையை மறைத்து குறைந்த அளவிலான தொகைக்கு வியாபாரம் நடைபெற்றது போன்றும், லாபத்தை குறைத்தும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கணக்கு காட்டிவந்தது வருமான வரித்துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு தொகையை வரி ஏய்ப்பு செய்து எந்த வகையில் முதலீடு செய்துள்ளார்கள் என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். மற்றோருபுறம் இவர்களுக்கு பழனி மற்றும் வெளியூர்களில் உள்ள சொத்துக்களின் மதிப்பு என்ன என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி பல்வேறு அவணங்களை கண்டுபிடித்துள்ளனர். இதேபோன்று கந்தவிலாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் செல்வகுமார் மற்றும் அவரது குடும்பத்தினரிடமும் மூன்று தினங்களாக தீவிரமாக விசாரணை நடைபெற்றது. கந்தவிலாஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் தங்களது வருமானத்தை குறைத்து காட்டி வரி செலுத்திவிட்டு சொத்துக்களை வாங்கியுள்ளதை வருமானவரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தநிலையில் இவர்களின் சொத்திற்கும் இவர்கள் அரசுக்கு செலுத்திய வருமானத்திற்கும் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளதால் கந்தவிலாஸ் நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதை வருமான வரித்துறை அதிகாரிகள் உறுதிசெய்தனர். மூன்று நாட்களாக நடைபெற்ற சோதனை நிறைவடைந்த நிலையில் சித்தனாதன் மற்றும் கந்தவிலாஸ் நிறுவனம் 93.56கோடிக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது. அதோடு 56 கிலோ அளவில் கணக்கில் வராத தங்கநகைகள் மற்றும் 2.2 கோடி ரூபாய் அளவிற்கு கணக்கில் வராத ரொக்க பணம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. முதற்கட்ட விசாரணையை முடித்துள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை முடித்துக்கொண்டு ஆவணங்கள், தங்கநகை மற்றும் பணத்தை கைப்பற்றிக்கொண்டு சென்றுள்ளனர்.
அடுத்த கட்டமாக சித்தனாதன் நிறுவனத்தின் உரிமையாளர்கள், கந்தவிலாஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு நோட்டிஸ் அனுப்பி விசாரணை நடத்த உள்ளனர். பழனியில் பஞ்சாமிர்த விற்பனையில் கொடிகட்டி பறந்த இரண்டு பெரிய நிறவனங்களான சித்தனாதன் மற்றும் கந்தவிலாஸ் நிறுவனங்கள் பெரிய அளவில் வரி ஏய்ப்பு செய்துள்ளது பழனியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி இருக்கிறது.