கடந்த சில வருடங்களாக தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதால் ஆடு, மாடு, குழந்தைகள், மனிதர்களையும் கடித்து குதறிக் கொன்று விடுவது தொடர்கதையாக உள்ளது.
கிராமங்களில் தங்கள் வாழ்வாதாரத்திற்காக விவசாயிகள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் ஆடுகளை நாய்கள் கடித்து கொன்று விடுவதால் விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து நொடித்துப் போய் உள்ளனர். பல குடும்பங்களின் வருமானமே ஆடு வளர்ப்புகள். ஆனால் வளர்ந்து வரும் ஆடுகளை நாய்கள் இறையாக்கிக் கொள்வதால் அந்த குடும்பங்கள் பேரிழப்பு சந்தித்து வருகின்றனர். ஆடு வளர்ப்பில் கிடைக்கும் வருமானத்தில் தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பதுடன் குடும்ப சுமைகளையும் குறைத்து வருகின்றனர்.
இதே போல், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கீரமங்கலம் மேற்கு பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி அப்துல் ஜபார் மனைவி பிச்சையம்மாள் (35). தனது குடும்ப வருமானத்திற்காக கடந்த ஒரு வருடமாக 9 செம்மறி ஆட்டுக்குட்டிகளை வாங்கி வளர்த்து வருகிறார். பகல் நேரங்களில் வயல்வெளியில் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று இரவில் வீட்டில் கட்டி வைத்துள்ளார். இன்று காலை அதே பகுதியில் உள்ள கம்பி வேலி போடப்பட்ட அவரது, தோட்டத்திற்குள் புல் அதிகமாக இருந்ததால் ஆடுகளை தோட்டத்திற்குள் மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு தோட்டத்தின் கேட்டை சாத்திவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார். மதியம் ஆடுகளைப் பார்க்க வந்தவர் தோட்டத்தில் ஆடுகளை காணாமல் தேடிய போது தோட்டம் முழுவதும் தோல் கிழிந்துகள், குடல் வெளியே வந்த நிலையிலும் ரத்தம் கொட்டக் கொட்ட ஆங்காங்கே பல ஆடுகள் இறந்தும் சில ஆடுகள் உயிர் போகும் நிலையில் துடித்துக் கொண்டும் கிடந்தது.
பிச்சையம்மாள் தோட்டத்திற்குள் நுழைவதைப் பார்த்து ஆடுகளை கடித்துக் கொண்டிருந்த நாய்கள் ஓடிவிட்டது. தான் கடன் வாங்கிய பணத்தில் ஆட்டு குட்டிகளாக வாங்கி வளர்த்த அத்தனை ஆடுகளையும் நாய்கள் கடித்துக் கொன்றவிட்டதே இனி எப்படி கடனை கட்டுவேன் என்று பச்சையம்மாள் கதறி அழுதது அனைவரையும் கலங்க வைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த கீரமங்கலம் தெற்கு கிராம நிர்வாக அலுவலர் விசாரணை செய்தார். கால்நடை மருத்துவர் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்தார்.
ஒரே நேரத்தில் 9 ஆடுகளையும் நாய்கள் கடித்துக் கொன்று பிச்சையம்மாள் குடும்பத்தை நிலைய குலையச் செய்துள்ள பெரும் சோகம் நிகழ்ந்துள்ள நிலையில் வாழ்வாதாரம் இழந்து வாடும் பிச்சையம்மாள் குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.