Skip to main content

ஊரடங்கை பயன்படுத்தி சானிடைசர் கொண்டு போலி மதுபானம் தயாரித்தவர்கள் 9 பேர் கைது!

Published on 19/05/2021 | Edited on 19/05/2021

 

9 arrested for making fake liquor with sanitizer using curfew

 

தமிழகத்தில் கரோனா ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் அரசு மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் மது குடிக்க முடியாமல் மது அருந்துவோர் அல்லாடுகின்றனர். இதனைப் பயன்படுத்தி சிலர் சட்ட விரோதமாக போலி மதுபானங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.  

 

கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடியை அடுத்த அகரம் ஊராட்சி இராமநாதன் குப்பத்தில், கரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி நீலகண்டன் மகன் உத்திராபதி (33) என்பவர், வீட்டில் போலியாக மதுபானங்களைத் தயாரிப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதனையடுத்து குள்ளஞ்சாவடி போலீஸார் அங்குச் சென்று, அந்த வீட்டில் அதிரடியாக சோதனையிட்டு,  போலியாக மதுபானங்களை தயாரித்துவந்த கும்பலை கைதுசெய்தனர்.

 

மேலும் போலீஸ் விசாரணையில், மருத்துவத்துறையில் பயன்படுத்தக் கூடியதும், கரோனாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுவதுமான Alcohol Hand Sanitizer கொண்டு மதுபானங்களைத் தயாரித்ததும் தெரியவந்தது.

 

அதனைத் தொடர்ந்து, சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் மூலமாக ஆய்வுகளை மேற்கொண்டபோது, இவர்கள் மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தியது Alcohol Hand Sanitizer என்பது உறுதிப்படுத்தபட்டது. மேலும், 400 லிட்டர் சேனிடைசர் கொண்டு நூற்றுக்கணக்கான பாட்டில்களில், பிரபல மதுபான கம்பெனிகளின் பெயரில் மதுபானம் தயாரித்ததும் கண்டுபிடிக்கபட்டது. 

 

அதையடுத்து, போலி மதுபானம் தயாரித்த கும்பல்களிடம் இருந்து, மதுபானம் தயாரிக்கும் இயந்திரங்கள், 2500 போலி மதுபாட்டில்கள், போலி ஸ்டிக்கர்கள், அட்டைப் பெட்டிகள், டாடா ஏஸ் வாகனம் உட்பட அனைத்தும் குள்ளஞ்சாவடி போலீஸாரால் கைப்பற்றப்பட்டது. மேலும், போலி மதுபானம் தயார்செய்த உத்திராபதி, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வீடூரை சேர்ந்த வரதன் மகன் வடமலை (38), குள்ளஞ்சாவடி அருகிலுள்ள பெரியகோவிலான்குப்பம் முத்துக்கிருஷ்ணன் மகன் ராமலிங்கம் (65), தாதாகுப்பம் சரவணன் மகன் மணிகண்டன் (24), முத்தான் மகன் தண்டபாணி (32), இராமநாதன்குப்பம் கந்தப்பன் மகன் ரகுபதி (46), ராஜேஷ்குமார், புதுச்சேரி ஸ்ரீதர், முள்ளோடை அன்பு ஆகிய  9 நபர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.

 

கரோனா ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி மதுபானங்கள் தயாரித்து விற்பனையில் ஈடுபட்டவர்கள் அதிரடியாக கைதுசெய்யப்பட்ட சம்பவம் குள்ளஞ்சாவடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்