Skip to main content

மீண்டும் பி.ஜே.பி. வந்தால் அது ஹிட்லர் ஆட்சியாகவே இருக்கும்: கி.வீரமணி எச்சரிக்கை!

Published on 21/05/2018 | Edited on 21/05/2018


கர்நாடக மாநிலத்தில் குதிரை பேரத்திற்கு இடமின்றி மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்து வெற்றி பெற்றதற்குப் பாராட்டுகள். நமது பொது எதிரி பி.ஜே.பி.யே என்ற அடிப்படையில் இரண்டே அணிகளாக இருந்து மதவாத பி.ஜே.பி.யை வீழ்த்தவேண்டும். 2019ல் மீண்டும் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால், அது ஹிட்லர் ஆட்சியாகவே இருக்கும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கர்நாடகத்தில் ஜனநாயகம் எப்படியோ பிழைத்துள்ளது தற்காலிகமாக. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நியாயத் தராசும் ஓர்ந்து கண்ணோடாத தேர்ந்த தீர்ப்பாக, கண்டிப்பும், கண்காணிப்பும் இருந்ததினால், கர்நாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டது. பா.ஜ.க.வின் ஒரு எம்.எல்.ஏ.வை தம்வசம் இழுக்க ரூ.150 கோடி வரை பேரம் பேசப்பட்ட தகவல் தொலைக்காட்சிளில் பரவிய தகவல் - நமது ஜனநாயகம் பண நாயகமாக மாற்றப்படும் கீழ்நிலையை உணர்த்தவில்லையா? பா.ஜ.க. முதல்வராக 3 நாள் கனவைச் சுமந்த எடியூரப்பா, தனது மூத்த முன்னோடியான வாஜ்பேயியின் வழியைப் பின்பற்றி வாக்கெடுப்புக்கு முன்னரே, அழுத கண்ணீரோடு பதவியை விட்டு விலகினார்.

இதற்குப் பெரிதும் காரணமான காங்கிரசு தலைமை, கர்நாடகக் காங்கிரசு, ஜனநாயகப் போராளிகள், கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமார் ஆகியோரின் திறமைமிக்க கண்காணிப்பும், மக்களின் உணர்வுகளும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையான அறப்போரும், உச்சநீதிமன்ற சட்டப் போர்மூலம்தான் ஜனநாயம் காப்பாற்றப்பட்டது. இதற்குக் காரணமான அனைவருக்கும் பாராட்டுகள்! இதன்மூலம் பாடம் கற்கவேண்டியவர்கள் பலர்.

முதலாவது பிரதமர் மோடி, அவரையொட்டி அவரது ஏவுகணையான பா.ஜ.க. தலைவர் அமித்ஷா ஆகியோரின் ஆணவத்திற்குக் கிடைத்த பலத்த சம்மட்டி அடி; பா.ஜ.க.வின் வரலாற்று முக்கியம் வாய்ந்த தோல்வி இது என்பதில் அய்யமில்லை.

பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். என்ற பாசீச சக்திகளின் கொட்டத்தை அடக்க, அவற்றின் அதிகார ஆதிக்க ஆணவத்திற்கு முடிவு கட்டவேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதற்கான அச்சாரம்தான் இந்த மகத்தான தோல்வி! பண பலம், அதிகார பலம், ஊடக பலம், ஆள் பலம் (Money Power, Rule Power, Muscle Power, Media Power) இவைகளை நம்பியே களம் இறங்கியதோடு, நீதிமன்றங்களைக்கூட தமது விருப்பத்திற்கு வளைக்கலாம், பல மாநிலக் கட்சிகளை உடைக்கலாம் அல்லது ஆளுநர்கள்மூலம் பதவி நீக்கி, ஆயாராம் காயாராம் குதிரை பேரம் நடத்தி - பல வித்தைகள்மூலம் ஆட்சி அதிகாரம் என்பதை எப்படியும் கைப்பற்றலாம் என்ற சூழ்ச்சி எண்ணத்திற்குக் கர்நாடக நிகழ்வுகள் பலத்த அடி கொடுத்துவிட்டன!

ஹிட்லர் ஆட்சி வரும் - எச்சரிக்கை!

இன்னும் ஓராண்டு காலத்திலோ, அதற்கு முன்போ - வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் மோடி ஆட்சி - பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., பாசிச ஆட்சியை வீட்டிற்கு அனுப்பினால்தான் ஜனநாயகமும், அரசியல் சட்ட அறநெறிகளும் காப்பாற்றப்படும்; இல்லையேல், மீண்டும் ஹிட்லர் ஆட்சியில் இருந்த ஜெர்மன்போலத்தான் நம் நாடு ஆகிவிடும் ஆபத்து காத்துக் கொண்டுள்ளது!

பன் மதங்கள், பல கலாச்சாரங்கள், பல மொழிகள் உள்ள நாட்டில், ஒரே மதம் - ஹிந்து மதம்; ஒரே கலாச்சாரம் - சமிஸ்கிருத கலாச்சாரம்; ஒரே மொழி - சமஸ்கிருதம், ஹிந்தி. ஒரே வரி விதிப்பு - ஒரே மொழி - ஒரே கல்வி முறை என்றெல்லாம் ஆக்கி, மாநிலங்களின் அதிகாரங்களை விழுங்கி, ஒரே மத்திய ஆட்சி (Unitary Government - No Federal Setup)) என்று கூட்டாட்சி தத்துவத்தையே குழிதோண்டி புதைத்திடும் ஆபத்தான நிலைமைதான் மீண்டும் 2019 ல் பா.ஜ.க. வெற்றி பெற்றால் ஏற்படும்!

4 ஆண்டுகால ஆட்சியில், வேலையின்மை கொடி கட்டிப் பறக்கிறதே!

வங்கி ஊழல்களும், நட்டங்களும், பொதுமக்கள் பணமும் கொள்ளை போகின்றன! மக்களின் வரிப் பணம் - ஏழை, எளிய மக்களின் நலவாழ்வுக்கும் பயன்படுத்தப்படவில்லை. அம்பானிகளும், அடானிகளும் கொழுத்து உலகின் செல்வ நாடுகளில் இந்தியா 6 ஆவது ஆகி மார் தட்டுகிறது! ஆனால், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நிலை எந்த வகையிலாவது உயர்ந்துள்ளதா? இதற்கு ஒரே ஒரு பொதுத் திட்டம் - மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதுதான்!

இதற்கு அனைத்து முற்போக்கு, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும், கட்சிகளும், ஓர் அணியில் ஒற்றுமையாகத் திரண்டு நின்று இந்த ஜனநாயக, மதச்சார்பின்மை, சமூகநீதி காப்பு அறப்போரினை நடத்திடவேண்டும். அனைவரும் ஒன்றுபட்டாக வேண்டிய வரலாற்றுக் கட்டாயம்; காலத்தின் கட்டாயம்! மூன்றாவது அணி என்ற பேச்சும், முயற்சியும், பா.ஜ.க.வுக்கு எருவிட்டதாகி விடக்கூடும். அந்த முயற்சி கைவிடப்படவேண்டும்.

எனவே, அனைத்து எதிர்க்கட்சிகளும், நமது பொது எதிரி பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.தான் என்று உணர்ந்து, ஓரணியில் திரளவேண்டும். ஆர்.எஸ்.எஸ். சார்பு அரசியல் நடத்தும் ஆளுநர்களைத் திரும்ப அழைக்கும் இயக்கத்தினை அகில இந்திய இயக்கமாகவே நடத்திடவேண்டும்.

தமிழ்நாட்டு ஆளுநர், கர்நாடக ஆளுநர் உள்பட இவர்களைத் திரும்ப அழைக்க வற்புறுத்தும் இயக்கம் தீவிரப்படுத்தப்பட வேண்டும். இது அவசரம் - இது அவசியம்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்