கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி வருகிறது. இதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடமும், சசிகலாவிடமும் சிறிது காலம் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜ் முக்கிய குற்றவாளியாகப் பார்க்கப்படுகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைகள் தற்பொழுது வரை நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் கைப்பற்றப்பட்டுள்ள மின்னணு சாதனங்களை தடயவியல் துறைக்கு அனுப்பி அதில் ஏதேனும் தடயங்கள் கிடைக்கிறதா என்பது தொடர்பான நடவடிக்கைகளை சிபிசிஐடி துரிதப்படுத்தி வருகிறது.
கோவையில் உள்ள தடயவியல் ஆய்வகத்திற்கு 8 செல்போன்கள் அனுப்பப்பட்டுள்ளது. சோதனைக்கு உள்ளாகும் இந்த 8 போன்களின் வழியாக யார் யாருக்கு எல்லாம் அழைப்புகள் சென்றுள்ளது; என்னென்னவெல்லாம் பேசி உள்ளார்கள்; என்னென்ன குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது என்பது தொடர்பாக அறிந்து கொள்வதற்காக சிபிசிஐடி போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ளவர்களின் செல்போன்களும் இதில் உள்ளது. நிபுணர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை நகரும் என சிபிசிஐடி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.