சேலத்தில், ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை உள்ளதாக ஆசை காட்டி இளைஞரிடம் 8.10 லட்சம் ரூபாய் சுருட்டப்பட்ட சம்பவம் குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சேலம் சூரமங்கலம் தர்மன் நகரைச் சேர்ந்தவர் முகமது அப்துல் மஜித் (34). இவருடைய செல்போன் வாட்ஸ்ஆப் எண்ணிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், பகுதி நேர வேலை இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதில் குறிப்பிடப்பட்டு இருந்த எண்ணிற்கு முகமது அப்துல் மஜித் தொடர்பு கொண்டு விசாரித்தார். ஆன்லைன் மூலம் தாங்கள் பரிந்துரைக்கும் இணையதளத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி, இணைய இணைப்பு ஒன்றை அனுப்பி வைத்தனர்.
அந்த இணைப்பை சொடுக்கிய அப்துல் முகமது மஜித், அதில் கோரப்பட்டிருந்ததன் படி, தன்னுடைய பெயர், ஊர், பிறந்த தேதி, வங்கி கணக்கு எண், ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்தார். மேலும், இணைப்பில் கூறியிருந்தபடி அதில் குறிப்பிடப்பட்டு இருந்த எண்ணுக்கு ஆன்லைன் மூலம் சில தவணைகளில் 8.10 லட்சம் ரூபாய் அனுப்பி வைத்தார். முதலீடு செய்து நீண்ட நாள்கள் ஆகியும் லாபமோ, முதலீட்டுப் பணமோ தனக்கு வந்து சேராததால் விரக்தி அடைந்த அப்துல், ஏற்கனவே பேசிய செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அந்த எண் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்துல், இதுகுறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் பழனியம்மாள் (பொறுப்பு) இதுகுறித்து விசாரணை நடத்தினார்.
அப்துல் செலுத்திய பணம், வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. அந்த வங்கிக் கணக்கு வைத்துள்ள நபரின் முகவரி, இன்னும் யார் யாரிடம் எல்லாம் இதுபோல் பணத்தைச் சுருட்டியுள்ளனர் என்பது உள்ளிட்ட விவரங்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர். சேலத்தில், பகுதி நேர வேலை என்ற பெயரில், ஆன்லைன் மூலம் பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.