சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள கொங்குபட்டி ஊராட்சியில் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் பல்வேறு அரசுப்பணிகள் நடந்தன. இப்பணிகளில் 7.96 லட்சம் ரூபாய் மதிப்பில் சில பணிகள் முடிக்கப்படாமலேயே செய்து முடித்ததுபோல் போலி ஆவணம் மூலம் மோசடி நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
இந்தப் பணத்தை இறந்துபோன ஒப்பந்ததாரர் மாதேசி என்பவர் பெயரில் செலுத்தப்பட்டதாக மோசடி ஆவணம் தயாரித்து கையாடல் செய்துள்ளதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர், கொங்குபட்டி ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் அம்மாசி, ஓய்வுபெற்ற இளநிலை பொறியாளர் சிவலிங்கம், திருப்பூரில் பணியாற்றிவரும் உதவி பொறியாளர் செந்தில்குமார், கரூர் மாவட்டம் குளித்தலை உள்கோட்ட உதவி செயற்பொறியாளர் யோகராஜ், காடையாம்பட்டி ஒன்றிய நிர்வாக நிர்வாக அலுவலர் அகிலா, உதவி பொறியாளர் சதீஷ், ஓமலூர் உள்கோட்ட உதவி பொறியாளர் சதீஷ் ஆகிய 7 பேர் மீது வழக்குப் பதிவுசெய்தனர்.
இவர்கள் மீது கூட்டு சதி, அரசு ஊழியராக இருந்துகொண்டு குற்றத்திற்கு உடந்தையாக இருந்தது, லஞ்சம் பெறுதல், அரசுப் பணத்தைக் கையாடல் செய்தது உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து, விசாரணை நடந்துவருகிறது.