தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக அதிகமாக பெய்துவருகிறது. வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (11.11.2021) மாலை மாமல்லபுரம், ஸ்ரீஹரிகோட்டா பகுதிகளுக்கு இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அவர் கூறியதாவது, “தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் தற்போது நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 100 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா, வட தமிழக கடற்கரை பகுதியில் இன்று மாலை கடந்து செல்லக்கூடும். இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களின் கரையோர பகுதிகளில் தரைக்காற்று 40 முதல் 45 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
கடந்த 24மணி நேரத்தில் அதிகபட்சமாக தாம்பரத்தில் 23 செ.மீ., சோழவரத்தில் 22 செ.மீ என மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24மணி நேரத்தைப் பொறுத்தவரையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
வட கடலோரம் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்றானது 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள், தமிழக கடற்கரை பகுதிக்கும், தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதிக்கும் இன்றும், நாளையும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். கடந்த அக். 1ஆம் தேதி முதல் இன்றுவரை (11ஆம் தேதி) தமிழகம் மற்றும் புதுவையில் பதிவான மழையின் அளவு 40 செ.மீ. இந்தக் காலத்தின் இயல்பான அளவு 26 செ.மீ. தற்போது பெய்திருப்பது 54 சதவீதம் அதிகம்.
சென்னையைப் பொறுத்தவரையில் தற்போதுவரை 74 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்தக் காலத்தில் இயல்பான அளவு 42 செ.மீ. இது 77 சதவீதம் அதிகம். தாம்பரம், சோழவரம் மற்றும் எண்ணூர் பகுதிகளில் அதி கனமழை பதிவாகியுள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் பிற்பகல் 4 மணிவரை அதி கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.