சேலத்தில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 74 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. வேட்புமனு தாக்கல், மனுக்கள் பரிசீலனை, திரும்பப்பெறுதல் வரை முடிந்துள்ளன. இன்று, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளன.
இது ஒருபுறம் இருக்க, தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் முக்கிய இடங்களில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் மற்றும் பரிசுப்பொருள்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
சேலம் மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக இதுவரை 4.70 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இந்நிலையில், சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாதகாப்பட்டி கேட் பகுதியில் வியாழக்கிழமை (மார்ச் 28, 2019) தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த ஓர் ஆம்னி வேனை மடக்கி சோதனை நடத்தியதில், 73.866 கிலோ தங்க நகைகள் இருப்பது தெரிய வந்தது.
இவற்றின் மதிப்பு ரூ.22.20 கோடி. சேலத்தில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் இருந்து மதுரையில் உள்ள நகைக்கடைகளுக்கு கொண்டு செல்வது தெரிய வந்தது. எனினும், சோதனையின்போது நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
உதவி தேர்தல் அதிகாரியான சதீஷிடம் நகைகள் ஒப்படைக்கப்பட்டன. இது தொடர்பாக நகை உரிமையாளர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. உரிய ஆவணங்களை சமர்ப்பித்துவிட்டு நகைகளை பெற்றுச்செல்லும்படி அறிவுறுத்தினர். வருமானவரித்துறை விசாரணையும் நடந்து வருகிறது.