சேலத்தில், வெளிமாநிலத்திற்கு கடத்திச் செல்ல இருந்த 7 டன் ரேஷன் அரிசியை மினி லாரியுடன் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சேலம் பள்ளப்பட்டி, சூரமங்கலம், ஜாகீர் ரெட்டிப்பட்டி பகுதிகளில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து காவல்துறையினர், அப்பகுதிகளில் கண்காணிப்புப் பணியைத் தீவிரப்படுத்தினர். இந்நிலையில் ஜாகீர் ரெட்டிப்பட்டி அம்பேத்கர் தெருவில் சிலர் மினி லாரியில் ரேஷன் அரிசியை ஏற்றிக் கொண்டிருந்தனர்.
காவல்துறையினர் அவர்களை நெருங்கி வருவதை பார்த்ததும், அரிசி கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து கடத்தலுக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த 7 டன் ரேஷன் அரிசி மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்த சூரமங்கலம் காவல்துறையினர், அவற்றை சேலம் உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், சேலத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கு ரேஷன் அரிசியை கடத்திச் செல்ல இருந்தது தெரிய வந்தது. கடத்தலில் ஈடுபட முயன்றதாக ரெட்டிப்பட்டி டாக்டர்ஸ் காலனியைச் சேர்ந்த ராமஜெயம் (51), பழைய சூரமங்கலத்தைச் சேர்ந்த லட்சுமணன் (26), ஓமலூர் செல்லப்பிள்ளைக்குட்டையைச் சேர்ந்த ராஜேந்திரன் (43) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
இவர்கள், ரேஷன் அட்டைதாரர்களிடம் இருந்து ரேஷன் அரிசியை கிலோ 2 முதல் 5 ரூபாய் வரை விலைக்கு வாங்கி, அதை கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.