தமிழகத்தில் உள்ள வங்கி ஏடிஎம்களில் நூதன முறையில் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர். அவர்களை பிடிப்பதற்காக தமிழக காவல்துறை தனிப்படையை அமைத்தது. இந்த நிலையில் கொள்ளையர்கள்அனைவரும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டறிந்த தனிப்படை காவல்துறையினர், உடனடியாக அங்கு ஹரியானா விரைந்தனர். அதைத் தொடர்ந்து, ஏடிஎம் கொள்ளை தொடர்பான வழக்கில் அமீர் அர்ஷ் என்பவரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஐந்து நாள் காவலில் எடுத்து காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன.
அதைத் தொடர்ந்து, ஏடிஎம் கொள்ளை தொடர்பாக, வீரேந்திர ராவத் என்பவரை காவல்துறையினர் டெல்லியில் கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக, அவரை விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல் கூறுகின்றன.
"தமிழகத்தில் 21 எஸ்.பி.ஐ. டெபாசிட் ஏடிஎம்களில் ஹரியானா கொள்ளையர்கள் பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர். சென்னையில் 15, கிருஷ்ணகிரி 3, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் தலா ஒரு ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 9 பேர் கொண்ட கும்பல் டெபாசிட் ஏடிஎம்களில் நூதன முறையில் பணத்தைக் கொள்ளையடித்தது அம்பலமாகியுள்ளது. தனிப்படை காவல்துறையினர் ஹரியானா மாநிலத்தில் முகாமிட்டு மற்ற நபர்களை தேடி வருகின்றன" என சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.