
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்துள்ள கோட்டுபுள்ளாம் பாளையம், பூங்கரை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். விவசாயியான இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து கால்நடைகளை வளர்த்து வருகிறார்.
சக்திவேல் அருகே உள்ள கொட்டகையில் 7 ஆடுகளை வளர்த்து வந்தார். இரவில் ஆட்டு கொட்டகைகளில் ஆடுகளை விட்டு மறுநாள் காலை வந்து மேய்ச்சலுக்கு ஓட்டி செல்வது வழக்கம். இந்தநிலையில் நேற்று இரவு வழக்கம் போல் சக்திவேல் தனது ஆடுகளை ஆட்டு கொட்டகையில் கட்டி வைத்து வீடு திரும்பியுள்ளார். இன்று காலை ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வந்து பார்த்தபோது 7 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து நம்பியூர் போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் நம்பியூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மர்ம விலங்கு ஆடுகளை கடித்துக் கொன்றது தெரிய வந்துள்ளது. வனத்துறையினர் அங்கு ஏதாவது வனவிலங்குகளின் கால் தடயங்கள் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.