கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பகுதியில் உரிமம் பெறாமல் பலர் எஸ்.பி.எம்.எல். ரக நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருப்பதாக மாவட்ட எஸ்பிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி கிருத்திகா, கெலமங்கலம் காவல் ஆய்வாளர் சுப்ரமணி உள்ளிட்ட காவலர்கள் கெலமங்கலம் வனப்பகுதியை ஒட்டியுள்ள சுற்றுவட்டார கிராமங்களில் வீடு வீடாக விசாரணை நடத்தினர்.
காடுலக்கசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த மாரப்பா (45), லட்சுமிபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் (47), பேவநத்தத்தைச் சேர்ந்த திம்மராயன் (42), இருளப்பட்டியைச் சேர்ந்த நாகராஜ் (37), உப்பு பள்ளத்தைச் சேர்ந்த சேட்டு மகன் முரளி (25), யு.புரம் கிராமத்தைச் சேர்ந்த திம்மராயப்பா (50), சங்கரப்பா (60) ஆகியோர் சட்ட விரோதமாக நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருப்பது தெரியவந்தது.
அவர்களிடமிருந்து தலா ஒரு நாட்டுத்துப்பாக்கி வீதம் மொத்தம் 7 எஸ்.பி.எம்.எல். ரக துப்பாக்கிகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்ததுடன், அவர்களையும் கைது செய்தனர். கெலமங்கலத்தில் பூஜை பொருள் வியாபாரம் செய்துவரும் சீனிவாசன் (45) என்பவர்தான், கைதான 7 பேருக்கும் துப்பாக்கிக்குத் தேவையான வெடிமருந்து பொருட்கள், கரி மருந்து, பால்ரஸ் குண்டுகள் ஆகியவற்றை சப்ளை செய்துவந்ததும் விசாரணையில் தெரியவந்தது. பிடிபட்டவர்கள் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டுத்துப்பாக்கிகளை வைத்திருந்ததாக கூறியுள்ளனர். அவர்களுக்கு வெடி மருந்துகளை விற்ற சீனிவாசனையும் கைது செய்தனர்.