Skip to main content

69 ஊராட்சிகளின் வங்கி கணக்கு முடக்கம் –ஊழல் அதிகாரியை தப்பவைத்த உயர்அதிகாரிகள்

Published on 05/08/2018 | Edited on 05/08/2018
ம்


அரசின் அதிகார பரவலாக்கத்துக்கும், உள்ளுர் பிரச்சனைக்காக மக்கள் தங்கள் பிரதிநிதியை தேர்வு செய்து அடிப்படை பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளவே உள்ளாட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சிலர், வார்டு உறுப்பினர், நகரமன்ற தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் என பல்வேறு மக்களால் நேரடியாக தேர்வு செய்யும் முறை உள்ளது.


இந்த உள்ளாட்சி அமைப்புகள் சரியாக நடைபெறும் மாநிலங்களுக்கு மத்தியரசு ஆண்டு தோறும் 3 ஆயிரம் கோடி வரை நிதியுதவி தருகின்றன. தமிழகத்துக்கும் கொடுத்து வந்தது. 2016 உள்ளாட்சி தேர்தலை நடத்த முயன்றது அதிமுக அரசாங்கம். பதவிகளுக்கு சரியான முறையில் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தவில்லை எனக்கூறி திமுக வழக்கு தொடுத்தது.

அந்த வழக்கில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாத தமிழக அரசுக்கும், தமிழக தேர்தல் ஆணையத்துக்கு கடந்த வாரம் கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தது சென்னை உயர்நீதிமன்றம்.


தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் மத்திய அரசு வழங்க வேண்டிய 3500 கோடி ரூபாய் நிதியை வழங்கவில்லை. மக்களிடம் வசூலிக்கும் வரிப்பணம், மாநில அரசின் நிதி உள்ளாட்சிகளுக்கு ஓரளவு பிரித்து தரப்பட்டுள்ளது. அதிலும் அதிகாரிகள் ஊழல் செய்ய திருவண்ணாமலை மாவட்டத்தில் 63 ஊராட்சிகளில் நிதி மோசடி நடந்திருப்பதை கண்டறிந்து அதிர்ச்சியாகி உள்ளனர் மண்டல அளவிலான அதிகாரிகள்.


கிராம ஊராட்சிகளின் நிதி அதிகாரம், தனி அலுவலர்கள் என்கிற பெயரில் பிடிஓ என்கிற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை ஒன்றியத்தில் உள்ள 69 ஊராட்சிகளில் போலியான பில்கள் மூலம் ஊராட்சி நிதியை வங்கியில் இருந்து எடுத்தது, வங்கியில் இருந்து எடுத்த பணத்துக்கு கணக்கு எழுதாதது, டெண்டர் விட்டு ரோடு போட்டதாக பணம் எடுத்தது, குடிதண்ணீர் மின் மோட்டார் மாற்றியது, லைட் மாற்றியது என்கிற பெயரில் பணம் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதனால் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 69 கிராமங்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க ஆகஸ்ட் 3ந்தேதி முதல் தடைவிதித்துள்ளார் ஊரக வளர்ச்சித்துறையின் உதவி இயக்குநர் அரவிந்தன்.


இந்த மோசடி நடக்க அதிக காரணமாக இருந்தவர் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய (கிராமம்) அதிகாரியாக இருந்த கருணாகரன் என்கிற அதிகாரி என்கின்றனர். அவர் கடந்த ஜீலை 31ந்தேதி ஓய்வு பெற்றுள்ளார். இந்த ஊழல், மோசடி சில மாதங்களுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் கருணாகரனை தப்பவைக்க அவர் ஓய்வு பெறும் வரை உயர் அதிகாரிகள் காத்திருந்து அவர் ஓய்வுக்கு பின்னர் இப்போது ஊராட்சிகள் நிதியில் மோசடி நடந்துள்ளது என அறிவித்துள்ளனர்.


திருவண்ணாமலை ஒன்றியத்தில் உள்ள 69 ஊராட்சி கணக்குகளில் மட்டும் 50 லட்சம் மோசடி நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அங்கெல்லாம் தணிக்கை செய்தால், 10 கோடிக்கு மேல் இந்த ஓராண்டில் ஊழல் நடந்துயிருக்கும் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

சார்ந்த செய்திகள்