சேலத்தில், இறைச்சிக் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் 64 கிலோ கெட்டுப்போன இறைச்சியைப் பறிமுதல் செய்து அழித்தனர்.
மாம்பழ சீசன் தொடங்கியதை அடுத்து, ரசாயனம் மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார்களின் பேரில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சேலத்தில் உள்ள பல இறைச்சிக் கடைகளில் சுகாதாரமற்ற முறையிலும், கெட்டுப்போன இறைச்சி விற்கப்படுவதாகவும் உணவுப் பாதுகாப்புத்துறைக்கு புகார்கள் சென்றன.
அதன்பேரில் மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சூரமங்கலம், அஸ்தம்பட்டி பகுதிகளில் செயல்பட்டு வரும் 15 இறைச்சிக் கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சுகாதாரமற்ற முறையிலும், குளிர்சாதனப் பெட்டியிலும் வைக்கப்பட்டு இருந்த ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி என 64 கிலோ கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர்.
மேலும், உணவு பாதுகாப்புத்துறையிடம் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் பெறாத மூன்று கடைகளுக்கும் 'சீல்' வைத்தனர். இதுகுறித்து உணவுபாதுகாப்பு அலுவலர்கள் கூறுகையில், “இறைச்சிக் கடைகளில் சுகாதாரமற்ற நிலையில் கடைகளின் முன்பு இறைச்சியைத் தொங்க விடக்கூடாது. துருப்பிடிக்காத கம்பியில் சுகாதாரமாக இறைச்சியை தொங்கவிடலாம்.
இறைச்சிக்கடை பணியாளர்கள் கையுறை, தலையுறை, ஏப்ரான் உறை அணிந்து சுகாதாரமான முறையில் விற்பனை செய்ய வேண்டும். கண்ணாடி கூண்டில் அல்லது கண்ணாடி போன்ற தாள் கொண்டு இறைச்சியை மூடி வைத்து விற்பனை செய்ய வேண்டும் என கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது” என்றனர்.