5 மற்றும் 8ஆம் வகுப்புக்கு பொது தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு மஜக பொதுச் செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான மு.தமிமுன் அன்சாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் இவ்வாண்டு முதல் 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருக்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் இது குறித்து பேசிய அவர், யாரும் இது குறித்து அச்சப்பட தேவையில்லை என்றும் அது போன்ற திட்டம் ஏதுமில்லை என்றும், அதை அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதிபட அவர் கூறியிருந்தார்.
உலகிலேயே தொடர்க்க கல்வியில் சிறந்து விளங்கும் பின்லாந்து நாட்டுக்கு சென்றவர், பல மகிழத்தக்க அறிவிப்புகளை வழங்குவார் என எதிர்பார்த்கிருந்த நிலையில், அவரது இந்த அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது.
இது மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தும் திட்டங்களின் தொடக்கமா? என்ற ஆழமான கேள்வியும் எழுகிறது.
இது காமராஜர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கலைஞர் போன்றவர்களின் கல்வித்துறை சார்ந்த நிலைபாடுகளுக்கு எதிரான போக்காகும்.
இந்த அறிவிப்பு, கிராமப்புற கல்வி வளர்ச்சியை பாதிக்கும் என்பதோடு, பின்தங்கிய சமூகங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளை பாதியிலேயே பள்ளிக்கூடங்களிலிருந்து விரட்டியடிக்கும் பாதகமாகவும் முடியும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்.
கல்வியை நம் மண்ணின் சூழலுக்கு ஏற்ப, ஐனநாயக முறையில் சமப்படுத்த திட்டங்களை உருவாக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகும். எனவே இது குறித்து தமிழக அரசு மாவட்ட வாரியாக கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
ஆசிரியர்களுக்கு வேறு வேலைகளை தராமல் , அவர் தம் பணிகளில் மட்டும் கவனம் செலுத்த செய்வது, மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்துவது, வகுப்பறைகளை தரம் உயர்த்துவது, செயல்வழி கல்வி முறைகளை ஊக்குவிப்பது, தொடக்கப் பள்ளிகளிகளில் விளையாட்டு கல்வி ஆசிரியர்களை பணியமர்த்துவது , 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையை உருவாக்குவது என முற்போக்கு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு அக்கறைக் காட்ட வேண்டும்.
இதற்கு மாற்றான திட்டங்களை கைவிட வேண்டும். எல்லோருக்குமான எளிய கல்வியே இன்றைய தேவையாகும். எனவே, ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மக்களின் கல்வி முன்னேற்றத்தைப் பாதிக்கும் , 5. மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு என்ற அறிவப்பை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்றார்.