கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் வகையில், சேலம் அரசு மருத்துவமனையில் காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு வரும் வருண் வாகனம், தீயணைப்புத்துறை வாகனம், தெளிப்பான்கள் மூலம் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. 6 மணி நேரத்திற்கு ஒருமுறை இவ்வாறு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இப்பணிகளை, சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
“கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அதிக மக்கள் வாழும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், பொதுமக்கள் அதிகம் கூடும் வழிபாட்டு தலங்கள், சந்தைகள், பெரிய தெருக்கள், மசூதிகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
வெளிநாடுகளில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு 1420 பேர் வந்திருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களின் வீடுகளுக்கு சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை அலுவலர்கள், பணியாளர்கள் நேரில் சென்று, அவர்களை தனிமைப்படுத்துவதற்கான ஒட்டு வில்லைகளை ஒட்டி வருகின்றனர். அவர்களை வீட்டிலேயே தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், வீட்டை விட்டு எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் வரக்கூடாது என்றும் அறிவுரை வழங்கி வருகின்றனர்.
டெல்லியில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டு சேலம் மாவட்டத்திற்கு திரும்பி உள்ளவர்களில் சேலம் மாநகர பகுதிகளில் 10 பேரும், பிற பகுதிகளில் 47 பேரும் என மொத்தம் 57 நபர்களின் விவரங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. அவர்கள் அனைவரும், அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
ஏற்கனவே, இந்தோனேஷியாவில் இருந்து சேலத்திற்கு வந்துள்ள 11 இஸ்லாம் மதபோதகர்கள் மற்றும் வழிகாட்டி ஒருவரை பரிசோதனை செய்ததில் 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களுடன் சேலத்தைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டு, அவர்களுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தனிமை வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.” இவ்வாறு ஆட்சியர் ராமன் கூறினார்.