தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக இருந்த சுமார் 55,952 சிம் கார்டுகளை சைபர் கிரைம் போலீசார் முடக்கியுள்ளனர். ஆவணங்கள் இல்லாமல் விற்கப்பட்ட சிம் கார்டுகளை சைபர் கிரைம் முடக்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சிம் கார்டுகள் விற்பனை செய்த ஐந்து கடை உரிமையாளர்களை மாநில சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம், கோயம்புத்தூர், கடலூர், திருச்சி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள சிம் கார்டு விற்பனை செய்யும் கடைகளில் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக சிம் கார்டுகளை பெற்று அதன் மூலம் பொதுமக்களைத் தொடர்புகொண்டு வங்கி அதிகாரிகள் பேசுவதாகவும், வங்கிக் கணக்கில் பிரச்சனை உள்ளது, வங்கி எண்ணை கொடுங்கள் என கேட்டு மோசடி செய்வது போன்றவை நிகழ்ந்து வரும் நிலையில் இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக தற்போது ஆவணங்கள் இல்லாமல் விற்கப்பட்ட 55,952 சிம் கார்டுகளை சைபர் கிரைம் போலீசார் முடக்கியுள்ளனர்.