விழுப்புரம் மாவட்டத்தில் கொள்ளையர் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. திண்டிவனம் அருகிலுள்ள மயிலம் அருகில் உள்ளது வெளியனூர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் வேணு. இவர் தன் வீட்டிலேயே சொந்தமாக மளிகைக் கடை வைத்து நடத்திவருகிறார். நேற்று முன்தினம் (25.07.2021) இரவு கடையை மூடிவிட்டு அவரும் அவரது மனைவி முத்துலட்சுமி, மகள் விஜயகுமாரி ஆகிய மூவரும் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் ஐந்து முகமூடி கொள்ளையர்கள், அவர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள்ளே நுழைந்தனர்.
கொள்ளையர்களைக் கண்டதும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூவரும் பதறி எழுந்தனர். அப்போது கொள்ளையர்கள் ஐந்து பேரும் தாங்கள் வைத்திருந்த கத்தியை எடுத்துக்காட்டி, ‘கத்தி சத்தம் போட்டால் உங்களைக் கொலை செய்துவிடுவோம்’ என மிரட்டியுள்ளனர். அதோடு அவர்கள் மூவரின் கை, கால்களையும் கட்டி, வாயில் துணியை வைத்து அடைத்துவிட்டு பீரோவில் இருந்த 49 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். அவர்கள் வீட்டைவிட்டுச் செல்லும்போது முத்துலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தாலி, கம்மல் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டனர்.
பின்னர் அவர்கள், “நாங்கள் வீட்டின் வெளியே ஒருமணி நேரம் காத்திருப்போம். யாராவது கத்திக் கூச்சல் போட்டால், மீண்டும் வீட்டுக்குள் புகுந்து உங்கள் மூவரையும் கொலை செய்துவிடுவோம்” என்று மிரட்டியுள்ளனர். அவர்கள் மூவரையும் வீட்டுக்குள்ளேயே கட்டிப் போட்டுவிட்டு வெளியே சென்றுவிட்டனர். இதனால் பயந்துபோன அந்த மூவரும் ஒருமணி நேரம் கழித்து கத்தி சத்தம் போட்டுள்ளனர். இவர்களது கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் வீட்டுக்காரர்கள் திரண்டனர். உடனடியாக மயிலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதர், திண்டிவனம் டி.எஸ்.பி கணேசன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் ஆகியவை வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஓடி நின்றுவிட்டது, யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. கொள்ளையடிக்கப்பட்ட 55 நகையின் மதிப்பு 22 லட்சம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மளிகை வியாபாரி வேணுவின் மகள் விஜயகுமாரிக்கு அடுத்த மாதம் திருமணம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துவைத்திருந்தனர். அதற்காக சேர்த்துவைத்திருந்த நகைகளைத்தான் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனால் அந்தக் குடும்பத்தினரும் அவர்களது உறவினர்களும் பெரும் சோகத்தில் உள்ளனர். இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்த மயிலம் போலீசார் மாவட்டக் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி தனிப்படை அமைத்து, ஐந்து முகமூடி கொள்ளையர்களைத் தீவிரமாக தேடிவருகின்றனர். இச்சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.