சேலம் அருகே, மகனுக்கு எம்.பி.பி.எஸ் சீட் வாங்கித் தருவதாகக் கூறி, விவசாயி ஒருவரிடம் 53 லட்சம் ரூபாய் வசூலித்து மோசடி செய்த வழக்கறிஞர் உள்ளிட்ட மூன்று பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள கோனேரிப்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் (52). விவசாயி. இவருடைய மகன் விஜய். இவர், பிளஸ்2 முடித்த பிறகு, மருத்துவம் படிக்க ஆர்வமாக இருந்தார். கடந்த 2016 & 2017ம் ஆண்டில், மகனை எப்படியாவது எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்த்து விட வேண்டும் என்பதில் கணேசனும் தீவிரமாக முயற்சி செய்து வந்தார். இதையறிந்த கொங்கணாபுரத்தைச் சேர்ந்த ஜோதிடர் பழனிமுத்து என்பவர், தனக்குத் தெரிந்த நண்பர்கள் மூலம் புதுச்சேரியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சீட் வாங்கித் தருவதாக நம்பிக்கை அளித்துள்ளார்.
இதையடுத்து கணேசனுக்கு, சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தங்கமணி, புதுச்சேரியைச் சேர்ந்த நாகராஜ் ஆகிய இருவரையும் ஜோதிடர் பழனிமுத்து அறிமுகம் செய்து வைத்தார்.
தங்கமணி, நாகராஜ் ஆகிய இருவரும் எம்.பி.பி.எஸ் சீட் வாங்கித் தருவதாகக் கூறி முதலில் கணேசனிடம் இருந்து 23 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளனர். பின்னர் பல்வேறு தவணைகளில் மேலும் பணம் பறித்துள்ளனர். அவரிடம் இருந்து மொத்தம் 53 லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்ட நாகராஜூம், தங்கமணியும் சொன்னபடி எம்.பி.பி.எஸ் சீட் வாங்கித் தரவில்லை. பணத்தை திருப்பிக் கேட்டபோதும் தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர்.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கணேசன், சேலம் மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையில் தங்கமணி, நாகராஜ் ஆகிய இருவர் மீதும் புகார் அளித்தார். இதற்கு உடந்தையாக இருந்த ஜோதிடர் பழனிமுத்து மீதும் புகார் அளித்தார்.
அதன்பேரில் காவல்துறையினர், அவர்கள் மூன்று பேர் மீதும் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.