கரோனா பெருந்தொற்றில் மக்களின் வாழ்வாதாரத்திற்கு துணை நிற்கும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரணமாக ரூ.4000 வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் பதவியேற்ற நாளிலேயே அறிவித்தார்.
கரோனா நிவாரண நிதியின் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் பணியை 10/05/2021 அன்று தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டு, 15/05/2021 முதல் நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டு மாடல் பள்ளி சாலையில் இயங்கி வரும் ரட்லண்ட் கேட் கூட்டுறவு பண்டகசாலை XNC 665 நடத்தும் நியாயவிலைக்கடை எண் - 1(MG007), 2(MG008), 3(MG009) ஆகிய மூன்று கடைகளில் வழங்க வேண்டிய தொகையை மொத்தமாக வங்கியிலிருந்து காஞ்சனா என்கிற அதிமுக பிரமுகர் எடுத்து வைத்திருப்பதாக அப்பகுதி மக்கள், திமுக வட்டக்கழக செயலாளரிடம் தகவல் அளித்தனர்.
வட்டக்கழக செயலாளர், ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதனின் கவனத்திற்கு மேற்கண்ட செய்தியை கொண்டு வந்தார். சட்டமன்ற உறுப்பினர் நடத்திய விசாரணையில் கூட்டுறவு சங்கத்தில் பொறுப்பில் இருந்த போது, அந்த பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் காஞ்சனா தன்னுடைய மகள் மற்றும் நெருங்கிய உறவினர்களை குறிப்பிட்ட மூன்று கடைகளில் தற்காலிகமாக பணியில் அமர்த்தி இருப்பதும், ஒரு நாளைக்கு 200 குடும்ப அட்டைகளுக்கான பணத்தை மட்டுமே வங்கியிலிருந்து எடுக்க முடியும் என்கிற நிர்வாக நடைமுறையை மீறி, அதிமுக பிரமுகர் காஞ்சனாவின் தலையீட்டின் பேரில் மூன்று கடைகளில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்குமான பணம் ரூ. 51 இலட்சம் வங்கியிலிருந்து மொத்தமாக எடுக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.
உடனடியாக இந்த விவகாரத்தை மருத்துவர் எழிலன், கழக துணைப் பொதுச் செயலாளர், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
உடனடியாக அமைச்சர் ஐ.பெரியசாமி தலையிட்டு ரூ.51 இலட்சமும் மீட்கப்பட்டு வங்கியில் செலுத்தப்பட்டது. மேலும் இவ்விவகாரம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.