திமுக செயல்தலைவர் ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்ட திமுகவின் ஊராட்சி செயலாளர் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை அனைவரையும் அழைத்து கட்சி பிரச்சனைகள் குறித்து விவாதித்து வருகிறார். அதன்படி இன்று மார்ச் 11ந்தேதி திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் காலையும், மதியம் திருவண்ணாமலை தெற்கு மாவட்டமும் விவாதத்தில் கலந்துக்கொள்கின்றன. இதற்கான அழைப்பு கடிதம் இரண்டு தினங்களுக்கு முன்பே கட்சியின் கீழ்மட்டம் முதல் உயர்மட்டம் வரையிலானவர்களுக்கு தரப்பட்டது. கட்சியினர் சென்னை அண்ணா அறிவாலயம் சென்று வர ஊராட்சி செயலாளர்கள் பேருந்து வசதி மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மார்ச் 10ந்தேதி இரவு சமூக வளைத்தளத்தால் திருவண்ணாமலை மாவட்ட திமுகவில் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை தெற்கு மா.செவும், திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏவாகவும் இருப்பவர் எ.வ.வேலு. இவர் திருவண்ணாமலை நகரை குப்பை இல்லாத நகரமாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக தூய்மை அருணை என்கிற அமைப்பை தொடங்கினார். கட்சிக்கடந்து தொடங்கப்பட்டுள்ள இந்த அமைப்பில் அனைத்து கட்சி நிர்வாகிகள், வியாபாரிகள், முக்கியபிரமுகர்கள், பொதுமக்கள் என அனைவரின் ஒத்தொழைப்போடு தொடங்கப்பட்ட இந்த குழு, வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை நகரத்தில் தூய்மை பணியில் ஈடுப்படுகின்றன.
இதுப்பற்றி தகவல்களை பொதுமக்களுடன் பகிர்ந்துக்கொள்ள, இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொள்ள தூய்மை அருணை என்கிற முகநூல் குழு தொடங்கப்பட்டுள்ளது. அதேப்போல் தூய்மை அருணை திருவண்ணாமலை என்கிற பெயரில் முகநூல் கணக்கும் உள்ளது. இந்த குழுவில் ஒவ்வொரு வாரமும் தூய்மை பணி செய்யும் புகைப்படங்கள், மற்ற கட்சி நிகழ்வுகளின் புகைப்படங்கள் பதிவேற்றப்படுகின்றன. ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் அதில் உறுப்பினராக உள்ளார்கள்.
இந்நிலையில் மார்ச் 10ந்தேதி இரவு 10.30 மணியளவில், தூய்மை அருணை திருவண்ணாமலை என்கிற குழுவில் கலைஞர் கருணாநிதியை விமர்சிக்கும் ஒரு புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டது. அது பதிவேற்றம் செய்யப்பட்ட சில நிமிடங்களில் பரபரப்பாகிவிட்டது. பதிவு போட்டவரை கட்சி விசுவாசிகள் விமர்சிக்க அடுத்த அரைமணி நேரத்தில் அந்த புகைப்பட பதிவு நீக்கப்பட்டது. பதிவு நீக்கப்பட்டாலும் கட்சியினர் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்படுத்தியுள்ளது. வேலுவின் நேரடி பார்வையில் நடைபெறும் இந்த குழுவில் இப்படியொரு பதிவு அதுவும் தலைவரை நேரடியாக விமர்சித்து வந்தது எப்படி என கேள்வி எழுப்புகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்ட தொண்டர்களை செயல்தலைவர் சந்திக்கும் நாளுக்கு முன்னால் இப்படியொரு பதிவு முகநூலில் வந்தது ஏதோச்சையாக வந்ததா அல்லது திட்டமிட்டு வந்ததா என பெரும் பட்டிமன்றம்மே நடைபெறுகிறது. அதற்கு காரணம் சில வாரங்களுக்கு முன்னால் எ.வ.வேலு, திமுகவை விட்டு விலகி பாஜகவில் இணைய பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்கிற தகவல் வெளியாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
Published on 11/03/2018 | Edited on 11/03/2018