சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பு பகுதியில் இருந்து போதை புகையிலை பொருட்கள் காரில் கடத்தப்படுவதாக சிதம்பரம் காவல் துணை கண்காணிப்பாளருக்கு தகவல் வந்தது. அதன் பெயரில் புவனகிரி காவல் ஆய்வாளர் அமுதா உள்ளிட்ட காவல்துறையினர் புவனகிரி பங்களா அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேத்தியாத்தோப்பு பகுதியில் இருந்து புவனகிரி நோக்கி வந்த கார் ஒன்றை போலீசார் சோதனைக்காக நிறுத்த முயன்றனர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது.
பின்னர் காரை துரத்திச் சென்று காவல்துறையினர் பிடித்தனர் பின்னர் அந்தக் காரை சோதனை செய்த போது மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்ட 500 கிலோ கொண்ட ஹான்ஸ் போதை புகையிலை, கூலிப் பாக்கெட் உள்ளிட்ட போதை புகையிலைகள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூபாய் 15 லட்சத்திற்கும் மேல் உள்ளதாக காவல்துறையினர் கூறினார். மேலும் காரில் வந்தவர்களிடம் விசாரித்த போது சிதம்பரம் அருகே துணிசிரமேடு மண்டபம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (50) என்றும் மேலும் அதே பகுதியைச் சேர்ந்த இருதயராஜ் (36) என்பவர் என்பது தெரியவந்தது. இதில் காரில் வந்த பாஸ்கரின் மகன் பாலா தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளார். அவரையும் தேடும் பணியில் காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இவர்களிடம் போதை புகையிலை பொருட்கள் யாரிடம் இருந்து வந்தது இதன் பின்னணி என்ன என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புவனகிரி பகுதியில் 500 கிலோ போதை புகையிலை பொருட்கள் விற்பனைக்கு எடுத்துச் சென்றபோது பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் காவல்துறையினர் பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா தலைமையில் புதுப்பேட்டை காவல்துறையினர் அம்மாபேட்டை பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் போதை புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது பண்ருட்டி மணி நகரைச் சேர்ந்த அன்சாரி (53) என்பதும் பின்னர் அவரது வீட்டில் சோதனை செய்தபோது 10 சாக்கு மூட்டைகளில் புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து அன்சாரியை கைது செய்துள்ளனர். அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மதிப்பு ரூ 3 லட்சம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.