ஈரோடு பிரதானமான மார்கெட் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகிறார்கள். வியாபாரிகள் சங்கத்தில் 1000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சங்கத்தின் தலைவராக உள்ளவர் - ஈரோடு அ.தி.மு.க. முக்கிய நிர்வாகியான பழனிச்சாமி என்பவர்.
இவரது மனைவி காஞ்சனா மாநகராட்சி மண்டல தலைவராக இருந்தார். மகன் மணிகண்டன் மாவட்ட 'ஜெ' பேரவை பாசறை தலைவராக இருக்கிறார். சங்க தலைவரான பழனிச்சாமி காய்கறி வியாபாரிகளுக்கு குடியிருப்பு வீட்டுமனை நிலம் வாங்கித் தருவதாகக் கூறி சங்க உறுப்பினர்கள் ஒவ்வொருவரிடமும் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்துள்ளார். ஆனால் பல வருடங்கள் கடந்தும் நிலம் வாங்கித் தரவில்லை. இதன் மொத்த தொகை சுமார் ஐம்பது கோடி.
அ.தி.மு.க.அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் துணையுடன் பழனிச்சாமி இருந்ததால் வியாபாரிகள் கொடுத்த பணம் என்னாச்சு ? நிலம் எங்கே? என்று கேள்வி கேட்க முடியாமல் தவித்தனர். இந்த நிலையில் பல வருடங்களாக மார்கெட் சுங்க வரி வசூல் பழனிச்சாமி கையிலேயே இருந்தது. சென்ற மாதம் நடந்த ஏலத்தில் சுங்க வரி வசூல் உரிமம் தி.மு.க.நிர்வாகிகள் வசம் வந்தது. இதனால் வியாபாரிகளுக்கு தைரியம் ஏற்பட்டு கணக்கு கேட்க தொடங்கினார்கள். இதனால் சங்க தலைவரான அ.தி.மு.க.பழனிச்சாமி நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கு கணக்கு வழக்கு காட்டுவதாகக் கூறி கூட்டம் போட்டார்.
அதன்படி சங்க உறுப்பினர்கள் நேதாஜி மார்க்கெட் பகுதியில் கூடியிருந்தனர். நான் சொல்வது தான் கணக்கு கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை என்று பழனிச்சாமி பேச சங்க நிர்வாகிகள் கொதிப்படைந்து அ.தி.மு.க.ஆட்சியை பயன்படுத்தி எங்களிடம் வசூலித்த ஐம்பது கோடியை ஏமாற்றுகிறீர்களா? என கேட்டதோடு, தக்காளி வியாபாரி தர்மபுரியான் என்பவர் சங்க கணக்கு வழக்குகள் முறையாக கொடுக்க வேண்டும் என கூறி விட்டு அவரது கடைக்கு சென்று விட்டார்.
அதன் பிறகு பழனிச்சாமியின் மகனும் அ.தி.மு.க. பாசறை மாவட்ட தலைவருமான மணிகண்டன் ஐம்பதுக்கும் மேற்பட்ட அடியாட்களை திரட்டிக் கொண்டு போய் வியாபாரி தர்மபுரியானை அவரது கடையில் வைத்து தாக்கியுள்ளனர். அ.தி.மு.க. அடியாட்களால் தாக்கப்பட்ட வியாபாரி தருமபுரியான் ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்து தன்னைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு கொடுத்தார்.
ஆட்சி அதிகாரம் பறிபோகிற நிலையில் ஆங்காங்கே மக்களை மிரட்டி ஏமாற்றிய அ.தி.மு.க. தாதாக்களின் கொள்ளையடிப்பு வேலை வெளி வரத்தொடங்கியுள்ளது.