திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருச்சி மாவட்டம் குணசீலத்தை சேர்ந்தவர் பிரசன்னா (24). இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு 7 வயது சிறுமியை அழைத்து வந்து, தன் வீட்டு கொல்லைப்புறத்தில் வைத்து பாலியல் ரீதியிலாக துன்புறுத்தியுள்ளார். இதில் பதற்றமடைந்த சிறுமி தனது தாயாரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், சம்பவம் குறித்து, ஜீயபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸர், பிரசன்னா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் வாத, பிரதிவாதங்கள் நிறைவுற்ற நிலையில் நேற்று(16.12.2024)தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், பிரசன்னாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும், கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் சிறைத் தண்டனையும் விதித்து, நீதிபதி ஸ்ரீவத்சன் உத்தரவிட்டார். அரசு தரப்பில் கூடுதல் அரசு உதவி வழக்குரைஞர் சுமதி ஆஜரானார்.