உக்ரைனில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்குள்ள இந்தியர்களை மீட்டுவரும் நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ருமேனியா நாட்டின் தலைநகர் புகாரெஸ்ட்டில் இருந்து 219 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் நேற்று (26/02/2022) இரவு 08.00 மணிக்கு மும்பை விமான நிலையம் வந்தடைந்தனர்.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களும் அடங்குவர். உக்ரைனிலிருந்த 219 இந்தியர்கள் சாலை மார்க்கமாக ருமேனியாவுக்கு வந்த நிலையில், அங்கிருந்து விமானத்தில் தாயகம் அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 5 மாணவர்கள் இன்று காலை இண்டிகோ விமானம் மூலமாக தமிழகம் வந்தனர். தமிழகம் திரும்பிய மாணவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜாகிர் அபுபக்கர், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஹரிஹரசுதன், சேலத்தைச் சேர்ந்த சாந்தனு பூபாலன், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த செல்வப்ரியா, தேனியைச் சேர்ந்த வைஷ்ணவி என தமிழகம் வந்த 5 பேரையும் அவர்களது பெற்றோர்கள் நெகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.