Skip to main content

செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் ஆப்ரேசன்... ஜெனரேட்டர் இல்லை... அடுத்தடுத்து உயிர்பலி... மதுரை அரசு மருத்துவமனையின் அலட்சியம்

Published on 08/05/2019 | Edited on 08/05/2019

மதுரை அரசுமருத்துவமனையின் அலட்சியத்தால் அடுத்தடுத்து நடக்கும் இறப்புகள் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. குழந்தை திருட்டில் இருந்து கர்பிணி பெண்ணுக்கு எயிட்ஸ் இரத்தம் ஏற்றியது வரை  தமிழகத்தை பதைபதைக்க வைத்து மூன்று மாதங்கள் கூட ஆகவில்லை

 

 

இந்நிலையில் மதுரையில் நேற்று மழை பெய்த காரணத்தினால் நகரெங்கும் ஆங்காங்கே மின்சாரம் தடைபட்டது. இதில் பல்நோக்கு அரசு மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை பிரிவில் 15 க்கும் மேற்பட்டவர்களுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டதாக கூறபட்ட நிலையில்..

  

MADURAI

 

 

MADURAI

 

மேலூர் பூஞ்சுத்தியை சேர்ந்த மல்லிகா, திண்டுகல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பழனியம்மாள், திருவில்லைபுத்தூரை சேர்ந்த ரவீந்திரன், ஆகியோருக்கு மின்சாரம் இல்லாமல் ஆக்ஜிஸன் தடைபெற்றதால் மூச்சுதிணறி இறந்தனர். அடுத்தடுத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்கள் திணற, மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஆறுமுகம், செல்லதாய் என்ற இருவர் இறக்க நோயாளிகளின் உறவினர்கள் பதறியடித்து குவியத் தொடங்கினர்.  

 

MADURAI

 

என்னதான் நடந்தது என்று அங்கிருந்த மல்லிகாவின் மருமகன் கணேசன் நம்மிடம் கூறுகையில்... செவ்வாய் அன்று இரவு 6:30 மணிக்கு பலத்த காற்றுடன் மழைபெய்தது. அப்போது மாமியை அவசர சிகிச்சை பிரிவில் ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சையில் இருந்தார். தீடீரென மருத்துவமனை முழுவதும் மின்சாரம் தடைபெற்றது. நாங்கள் ஓடி அவர் சிகிச்சை பெறும் இடத்திற்கு சென்று என்ன ஆச்சு என்றோம் ”ஒரே கும்மிருட்டு என் செல்போன் டார்ச் லைட்டில் தான் அவருக்கு சிகிச்சை கொடுத்தார்கள். ஜெனரேட்டர் இல்லையா அவங்க உயிருக்கு எதுவும் ஆகாதா என்று கேட்டேன் உடனே என்னை வெளியே பிடித்து தள்ளிவிட்டார்கள்”.

 

அப்போது எங்கள் உறவினர்கள் அனைவரும் பதட்டத்திலேயே இருந்தோம். சிறிது நேரத்தில் அவருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டதாக கூறினார்கள். அடுத்த சில நொடிகளில் ஸ்டச்சரில் வெளியில் கொண்டு போனார்கள். எல்லாமே செல்போன் வெளிச்சத்தில்தான் நடந்தது. 

 

MADURAI

 

அடுத்தடுத்து படுக்கையில் சிகிச்சையில் இருந்த நோயாளிகளின் அலறல் சத்தம் அய்யோ காப்பாத்துங்க மூச்சுவிட முடியாமல் தூக்கி தூக்கிப்போடுது என்று கத்த, சிறிது நேரத்தில் அடுத்தடுத்து மூன்று பேர்கள் என் கண் முன்னால் துடிதுடித்து இறந்தார்கள். அதில் என் மாமியாரும் ஒருவர். என்னால் தாங்க முடியவில்லை. டிஜிட்டல் உலகம் என்கிறார்கள் மதுரைதான் தென்மாவட்டத்திற்க்கு தலைநகரம் லட்சக்கணக்கான நோயாளிகள் இதை நம்பிதான் வருகிறோம். எங்களால் தனியார் மருத்துவமனைக்கு சென்று வைத்தியம் பார்க்கமுடியாது. மதுரை அரசு பல்நோக்கு மருத்துவமனை எல்லா வசதிகளும் இருக்கு என்கிறார்கள். ஆனால்  மிக மிக முக்கியமான அடிப்படை விசயம் மின்சாரம் அது தடைபெற்றால் மாற்று ஜெனரேட்டர் வசதிகூட சரியாக இல்லாமல் பழுதாகி பல உயிர்கள் பலியாவது என்ன நியாயம்?. இதைவிட கொடுமை இங்கிருந்த ஒரு நோயாளியின் உறவினர் கூறினார் நேற்று டார்ச்லைட் உதவியுடம் ஆப்ரேசனே நடந்திருக்கிறது. அது என்னாச்சுனே இப்ப வரைக்கும் சொல்லமாட்டிக்கிறாங்களாம் இந்த கொடுமையை என்ன சொல்றது.

 

 

வெளியில் ஒரு செருப்பு கடையில்கூட ஜெனரேட்டர் வச்சிருக்கான். இங்கு என்னடானா ஏழை மக்களின் உயிரை ஏளனமாய் நினைக்கிறாங்க. இதுக்கு நியாயம் வேண்டாமா? என்று கதறி அழுதார் கணேசன்...

 

அடுத்து மருத்துவமனையின் டீன் வனித்தா மேடத்தை பார்த்தோம்...

 

MADURAI

 

என்ன மேடம் தென்தமிழகத்தின் மிக முக்கிய பல்நோக்கு மருத்துவமனையில் ஒரு ஜெனரேட்டர் வசதி கூடவா இல்லை? இத்தனை உயிர் இழப்பிற்கு என்ன பதில் சொல்லபோகிறீர்கள் மக்களின் கொந்தளிப்பு இவ்வளவு அலட்சியமாக நிர்வாகம் இருக்கிறதே என்க...

 

அதற்கு டீன் வனிதாவோ ”அப்படியெல்லாம் இல்லை இறந்த ஐவருமே கரண்ட் கட்டானதால் சாகவில்லை காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையா இவர்கள் ஏற்கனவே மிக மோசமான நிலையில் இருந்தார்கள். 6.25 க்கு கரண்ட் கட்டானது உண்மைதான் ஆனால் இவங்க இறந்தது அதனால் அல்ல என்றார்.

 

என்ன மேடம் ஜெனரேட்டரை ஏன் ஆன் செய்யவில்லை? என கேட்டதற்கு..

 

இல்லை ஜெனரேட்டர் பழுதாக இருந்துள்ளது. அதை உடனடியாக சரி செய்ய தகுந்த நடவடிக்கை எடுத்தோம் அதற்குள் இறந்ததால் எல்லோரும் இப்படி ஒரு வதந்தியை பரப்ப தொடங்கி உள்ளனர்.

 

அடுத்து காலையில் இறந்தவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தவர்களையும் இதோடு சேர்த்து விட்டனர் என்று முன்னுக்கு பின் பதில் அளித்தார் பொறுப்புள்ள டீன் வனிதா..

 

இந்த சம்பவத்தால் மதுரை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பகுதி பதட்டமாகவே காணப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்