கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டிருக்கும் அதேவேளையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகள் முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொது மக்கள் சொந்த ஊர், துக்க நிகழ்வுகள், திருமணம் போன்ற நிகழ்வுகள், தொழில், வியாபாரம் போன்ற தவிர்க்க முடியாத காரணத்திற்காக மக்கள் வெளியே செல்ல இ-பாஸ் அவசியம் என்று அரசு அறிவித்துள்ளது.
கட்டாயமாக இ-பாஸ் இருந்தால் மட்டுமே வெளியில் செல்ல முடியும் என்ற நிலையில், விண்ணப்பித்த பல்லாயிரம் பேருக்கு இ-பாஸ் கிடைக்காமல் சிரம்மபட்டு வருகிற அதே வேளையில், பணம் கொடுத்தால் இ-பாஸ் கிடைக்கும் என்ற புகார்கள் எழுந்து வந்த நிலையில் இ-பாஸ் விற்பனை செய்துவந்த இரண்டு அரசு ஊழியர்கள் உள்பட ஐந்து பேரை சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸ்சார் கைது செய்துள்ளார்கள்.
கரோனா நோய் தொற்று காரணமாக அரசு பொதுமுடக்கத்தை கொண்டுவந்த நிலையில், இ-பாஸ் முதலில் சென்னை மாநகர காவல்துறை முதல் இரண்டுநாள் வழங்கிய நிலையில், சென்னை மாநகராட்சியின் மூலம் பின்னர் வழங்கப்பட்டது. பிறகு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மூலம் இ-பாஸ் வழங்கப்பட்டு வந்தது, இந்தநிலையில் பல புகார்கள் எழுந்த நிலையில் இதனை தவிர்க்கும் விதமாக ஆன்லைன் மூலம் இ-பாஸ் வழங்கப்பட்டது.
இதிலும் பணம் கொடுப்பவர்களுக்கே இ-பாஸ் வழங்கப்படுகின்றது என்ற புகார் எழுந்தது இதனை கண்காணித்து வந்த காவல்துறை இ-பாஸ் விற்பனை செய்துவந்த மோசடியில் ஈடுபட்ட சென்னை மாநகராட்சி வருவாய் ஆய்வாளர் குமரேசன் மற்றும் சென்னை மாவட்டாசியர் அலுவலக வருவாய் ஆய்வாளர் உதையா, தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தை சேர்ந்த தேவேந்திரன் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளர்.
இவர்கள் வெளியூர் செல்ல விரும்புவோரிடம் டிராவல்ஸ் நிறுவன மூலம் இ-பாஸ் விற்பனை செய்து வந்ததும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல ஒரு நபருக்கு இரண்டு முதல் மூன்றாயிரம் வரையும், வெளிமாநிலம் செல்ல ஒருநபருக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரை வசூல் செய்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் இதில் யார் யாருக்கு தொடர்புள்ளது என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.