திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அனுமந்த உபாசகர் தெருவைச் சேர்ந்த 16 வயது சிறுமியும் லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த டிப்ளமோ படித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் இருந்த சுகேஷ் என்ற 19 வயது வாலிபரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் அச்சிறுமி வசிக்கும் அனுமந்த உபாசகர் தெரு பகுதியைச் சேர்ந்த டிகிரி படிக்கும் செல்வம் என்பவரின் 18 வயது மகன் தீபக்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. காதலித்ததோடு அந்த சிறுமியின் பின்னால் சென்று காதல் டார்ச்சர் செய்துள்ளார். இதுகுறித்து அச்சிறுமி தான் காதலிக்கும் சுகேஷிடம் ஒருதலை காதலனின் டார்ச்சரை கூறியுள்ளார்.
கடந்த நவம்பர் எட்டாம் தேதி தீபக் வீட்டிற்குச் சென்ற சுகேஷ், நீ ஒருதலையாக காதலிக்கும் பெண்ணும் நானும் சின்சியராக காதலிக்கிறோம். அதனால் அவளை தொந்தரவு செய்யாதே என மிரட்டலாகவும், எச்சரிக்கையாகவும் கூறியதாக கூறப்படுகிறது. என் வீட்டுக்கே வந்து அவளை காதலிக்கிறேன், நீ ஒதுங்கிக்கன்னு சொல்றியா என ஆத்திரமடைந்த தீபக், அவருடைய தந்தை செல்வம், தீபக்கின் கூட்டாளிகள் 20 வயதான பாலாஜி, 25 வயதான தருமன், 16 வயது சிறுவன் ஆகிய ஐந்து பேர் சேர்ந்து சுகேஷை வீட்டுக்குள் இருந்து தெருவுக்கு இழுத்து வந்து கம்பி, கட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். தலையிலும் பலமாகத் தாக்கியுள்ளனர். இதன் காரணமாக ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கீழே விழுந்த சுகேஷை மீட்டு அக்கம் பக்கத்தினர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதுகுறித்து அடிப்பட்டவரிடம் வாக்குமூலம் வாங்கி வழக்குப் பதிவு செய்து ஐந்து பேரை திருப்பத்தூர் நகர போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சுகேஷ் நவம்பர் 12 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியான குடும்பத்தினர் மற்றும் சுகேஷின் நண்பர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் டூ வாணியம்பாடி செல்லும் பிரதான சாலையில் ஒன்றிணைந்து இதற்குப் பழிக்குப் பழி வாங்கவேண்டும், அடித்தவர்கள் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தலாமா என ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்
இந்நிலையில் நவம்பர் 13 ஆம் தேதி மாலை சுகேசின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு திருப்பத்தூருக்கு வந்தது. வீட்டில் இருந்து சுடுகாட்டிற்குச் செல்லும் சாலையில் உள்ள 30க்கும் மேற்பட்ட கடைகளை அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் மூட வைத்தனர். அதன் பின்னர் 100க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்புடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.