தமிழகத்திலிருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும் வலைகள் பறிக்கப்படுவதும் தொடர்ந்து அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. அண்மையில் புதுக்கோட்டை மீனவர் ராஜ்கிரண் இலங்கை கடற்படை கப்பல் மோதி இறந்த நிலையில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு உடல் பெறப்பட்டது. இது தொடர்பாக தற்போது வரை சர்ச்சை நீடித்து வருகிறது.
இந்நிலையில் ராமநாதபுரம் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 42 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 6 விசைப்படகுகள் மற்றும் அதில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 42 மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்து உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்துச் சிறைபிடித்த மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வேண்டுமென அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.