தூத்துக்குடியின் கடல் மார்க்கமாக சர்வதேச நாடுகளுக்குக் கடத்தப்படும் கஞ்சா அபின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் இலங்கை வழியாகக் கடத்துவது தொடர் சம்பவமாகிவிட்டது. ஏனெனில் கடத்தலில் வளமான தொகைகள் கடத்தல் கூலியாகக் கிடைப்பாதாலேயே தூத்துக்குடியை ஒட்டிய கடல்பகுதியில் கடத்தல், தொழிலாகவே நடந்து வருகிறது. ஆனாலும் இவைகளைத் தடுப்பதற்காக கடலோரப் பாதுகாப்பு படைகளும், க்யூ பிரிவு யூனிட்டும் தீவிரமாகவே செயல்பட்டு வருகின்றனர்.
இலங்கைக்குப் போதைப் பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து க்யூ பிரிவு போலீசார் எஸ்.ஐ.க்கள் வேல்ராஜ், ஜீவமணிதர்மராஜ் ஏட்டுக்களான இருதயராஜ்குமார், ராமர் உள்ளிட்ட காவல் படையினர் நான்கு பிரிவுகளாகப் பிரிந்து தீவிர கண்காணிப்பை மேற்கொண்டனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு தாளமுத்து நகர் சுனாமி காலனி அருகே தீவிரச் சோதனையிலிருந்த க்யூ பிரிவு போலீசார் அந்த வழியே வந்த மினி லாரியை தடுத்து நிறுத்த முயன்றனர். போலீசாரைக் கண்ட மினி லாரியிலிருந்தவர்கள் தப்பியோட, போலீசார் அந்த வாகனத்தை விரட்டிச் சென்று மடக்கினர். அதில் நடத்தப்பட்ட சோதனையில் 13 முட்டைகளில் சுமார் 450 கிலோ கஞ்சா இருப்பது தெரியவர அதோடு மினிலாரியைப் பறிமுதல் செய்த க்யூ பிரிவு போலீசார் லாரி டிரைவரான சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியின் ஆவாரங்காட்டைச் சேர்ந்த ஆண்டிசெல்வம் என்பவரையும் கைது செய்தனர்.
அவர்களின் விசாரனையில் தூத்துக்குடியிலிருந்து இலங்கை வழியாக சர்வதேச நாடுகளுக்கு கஞ்சா கடத்தயிருப்பது தெரியவந்திருக்கிறது. மேலும் பிடிபட்ட கஞ்சாவின் சர்வதேச மதிப்பு 2 கோடி என்றும் கூறுகின்றனர் க்யூ பிரிவு போலீசார்.
போதைப் பொருட்கள் தொடர் கடத்தலாகிப் போன சம்பவம், முத்து நகரைப் பரபரப்பாக்கியிருக்கிறது.