காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது. தமிழக அரசின் ஒப்புதலின்றி மத்திய அரசு 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அனுப்பியதாகச் சர்ச்சை எழுந்தது. இதற்குப் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் ஆக்சிஜன் விவகாரத்தை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று (22/04/2021) விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி தலைமையிலான அமர்வு, தமிழகத்தில் போதிய அளவுக்கு ஆக்சிஜன் இருப்பு உள்ளதா? ரெம்டெசிவிர் மருந்து தமிழகத்தில் போதிய அளவு உள்ளதா? தேவையான அளவு வெண்டிலேட்டர் வசதி உள்ளதா? என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினர். இதுகுறித்து அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் அரசுத்துறை செயலாளர்களிடம் விளக்கம் பெற்று இன்று மதியம் 02.15 மணிக்கு நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இன்று மதியத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.