சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா இன்று (09/08/2022) மாலை 05.30 மணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்தியாவின் இதயத்துடிப்பு என்ற பெயரில் டிரம்ஸ் கலைஞர் சிவமணி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதேபோல், பியானோ கலைஞர் ஸ்டீபன் தேவசி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ள இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "அனைவரும் மெச்சத்தக்க வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாடு அரசு நடத்தியுள்ளது. தமிழ்நாட்டின் செல்வாக்கு உலக நாடுகள் மத்தியில் உயரும் என முன்பே நான் கூறினேன். போட்டியில் வெற்றி பெற்றவர்களை விட நான் அதிகமான மகிழ்ச்சியில் இருக்கிறேன். செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ரூபாய் 102 கோடி ஒதுக்கி 18 துணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டன.
சிறப்பாக நடத்தி முடித்த அமைச்சர் மெய்யநாதன், அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு பாராட்டுகள். சென்னையில் தங்கியிருந்த நாட்களை வீரர்கள் நிச்சயம் மறக்க மாட்டார்கள் என நம்புகிறேன். தமிழகத்தின் கலாச்சாரம், வரலாறு, குறிப்பாக உணவு ஆகியவற்றை ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
சர்வதேச கடற்கரை போட்டிகளை நடத்தவும், தமிழ்நாடு தயாராக உள்ளது. சிலம்பாட்டத்திற்கு தேசிய அங்கீகாரம் பெற்றுத் தர முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். நவீன தேவைக்கு ஏற்ப விளையாட்டு உள்கட்டமைப்பை புதுப்பிக்கவுள்ளோம். அதற்குள் முடிந்துவிட்டதா என ஏங்கும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளன. அனைத்து வீரர்களும் அடிக்கடி சென்னை வர வேண்டும்; சென்னையை மறக்க வேண்டாம்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.