தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு அத்யாவசியப் பொருட்கள் மற்றும் போதைச் சரக்குகள் ரெகுலராகவே கடத்தப்படுகின்றது. இதற்காக தூத்துக்குடி இலங்கை கடல் மார்க்கத்தை கடத்தல் கடல் வழியாகவே பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.
இந்தச் சூழலில் நேற்று முன்தினம் இரவு இலங்கை கல்பிட்டியா துறைமுகம் அருகேயுள்ள குதிரைமலை முனைப்பகுதியில் தமிழக மீன் பிடி படகு ஒன்றை வழி மறித்துச் சோதனை செய்திருக்கின்றனர் இலங்கை கடற்படையினர். அதுசமயம் படகில் இலங்கைக்கு கஞ்சா மூட்டைகள் கடத்திச் செல்லப்பட்டது தெரியவர, படகிலிருந்த 10 மூட்டைகளின் 400 கிலோ கஞ்சாவையும் படகையும் பறிமுதல் செய்த கடற்படையினர் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் மற்றும் கஞ்சாவை வாங்கிச் செல்ல காத்திருந்த இலங்கை புத்தளத்தைச் சேர்ந்த 5 பேர் என 10 பேரைக் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுப்படகு தங்கச்சிமடத்தில் பதிவு செய்யப்பட்டது. கஞ்சா கடத்தலில் பிடிபட்டவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரிக்சன், கிறிஸ்டி ராஜ், தங்கச்சிமடம் அந்தோணி, கீழக்கரை இம்ரான்கான், திருப்புலானி உதயகுமார் என தெரியவந்தது. இவர்கள் மதுரையிலிருந்து கஞ்சா மூட்டைகளைக் கடத்திக் கொண்டு வந்து தூத்துக்குடியின் கீழவைப்பார் பகுதியிலிருந்து படகில் கடத்தியுள்ளனர் என தெரியவந்துள்ளது. இதன் மதிப்பு ஒரு கோடி 35 லட்சம் என்றும் சர்வதேச மதிப்பு 20 கோடி என்றும் சொல்லப்படுகிறது.
இது குறித்து தமிழக க்யூ பிரிவு போலீசார் மற்றும் மத்திய அரசின் உளவுத்துறையான ஐ.பி. ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்பகுதியிலிருந்து உட்சபட்சமாக 400 கிலோ கஞ்சா இலங்கை முனை வரை கடத்திச் சென்று பிடிபட்டது பரபரப்பையும் கிளப்பியுள்ளது.