15 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் அதிமுகவை சேர்ந்த 7 பேர் மட்டுமே வேட்பாளராக அறிவித்துள்தைக் கண்டித்து புதுக்கோட்டை தையல் கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு பூட்டுப்போட்டு சிஐடியு சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை திலகர் திடல் அருகில் உள்ளது மாவட்ட மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கம். இந்த சங்கத்திற்கு 7 இயக்குனர் பதவிகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும். அதிமுக சங்கத்தின் சார்பில் 7 பேர், திமுகவின் சார்பில் 7 பேர், சிஐடியு சார்பில் தையல் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.மாரிக்கண்ணு உட்பட 15 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், அதிமுக வேட்பாளர் பட்டியலில் உள்ள 7 பேரைத் தவிர இதர 8 பேரையும் தகுதிநீக்கம் செய்துவிட்டு அதிமுகவினரை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படடதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நாளான திங்கள் கிழமையன்று கூட்டுறவு சங்கத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி கண்ணன் என்பவர் இல்லை. அங்கிருந்த எழுத்தரிடம் கேட்டதற்கு அவர் சென்னை சென்றுள்ளார். எனக்கு எதுவும் தெரியாது எனக்கூறினார்.
பூட்டுப்போடும் போராட்டம்
இத்தகைய முறைகேடான தேர்தலைக் கண்டித்து கூட்டுறவு சங்கத்தின் முன்பாக புதுக்கோட்டை மாவட்ட தையல் தொழிலாளர் சங்கத்தினர் (சிஐடியு) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் நாளன்று தேர்தல் நடத்தும் அதிகாரி வராததைக் கண்டித்தும், மேல் அதிகாரிகளிடம் முறையிட்டும் முறையான பதில் அளிக்க மறுத்ததைக் கண்டித்தும் கூட்டுறவு சங்கத்திற்கு பூட்டுப்போட்டு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், நகரச் செயலாளர் சி.அடைக்கலசாமி, சிஐடியு மாவட்டத் தலைவர் க.செல்வராஜ், செயலாளர் கே.முகமதலிஜின்னா, துணைத் தலைவர்கள் எம்.ஜியாவுதீன், எஸ்.பாலசுப்பிரமணியன், தையல் கூட்டுறவு தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சி.மாரிக்கண்ணு, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.விக்கி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பூட்டுப்போடும் போராட்டத்தைத் தொடர்ந்து அங்கு வந்த காவல் துணைக்கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போட்டிருந்த பூட்டை உடைத்துவிட்டு, அலுவலகத்திற்கான பூட்டைப் போட்டு பூட்டியதோடு அங்கிருந்த அதிகாரிகளையும் வெளியேற்றினர். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இந்த முறைகேடு குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். மேலும்,
சிபிஎம் கண்டனம்
இதுகுறித்து மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் கூறும்போது, மாவட்டம் முழுவதும் கூட்டுறவு சங்கத் தேர்தல் இதுபோன்ற அராஜகமான முறையில் தான் அரங்கேற்றப்படுகிறது. மாவட்ட ஆட்சியர், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் இதுகுறித்து பலமுறை முறையிடும் எந்த நடவடிக்கையும் இல்லை. இது கூட்டுறவு என்ற அமைப்பதே சிதைக்கும் நடவடிக்கையாகும். அளுங்கட்சியினர் கொள்ளையடிக்க மட்டுமே கூட்டுறவு சங்கங்கள் என்ற நிலையை உருவாக்கும் அதிமுகவினரின் இத்தகைய அராஜக நடவடிக்கையைக் கண்டித்து மிகப்பெரிய அளவில் போராட்டங்களை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம் என்றார்.
போட்டோ – pனம1இ pனம2.