Skip to main content

40 கோடி தொழிலாளர்கள் வேலையிழக்கும் ஆபத்து: நிவாரண திட்டம் வேண்டும்! ராமதாஸ்

Published on 10/04/2020 | Edited on 10/04/2020

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகையே ஆட்டிப்படைத்து வரும் கரோனா வைரஸ், இந்தியாவின் மீது கிருமித் தொற்று தாக்குதலை மட்டுமின்றி, அரசாலும், தனிமனிதர்களாலும் தாங்கிக் கொள்ள முடியாத, வரலாறு காணாத பொருளாதாரத் தாக்குதலையும் நடத்தியிருக்கிறது. கரோனா வைரஸ் தாக்குதலின் பக்கவிளைவுகளால், இந்தியாவில்  40 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலையிழந்து வறுமையில் வாடுவர் என கணக்கிடப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பான வேலையிழப்பு மற்றும் பொருளாதார இழப்புகளால் அமைப்பு சார்ந்த பணியாளர்களைவிட, அமைப்பு சாரா தொழிலாளர்கள் தான் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.  
 

ramadoss



இந்தியாவின் ஒட்டுமொத்த தொழிலாளர்களில் 10 விழுக்காட்டினர் மட்டும்தான் அமைப்பு சார்ந்தவர்கள், மீதமுள்ள 90% தொழிலாளர்கள் அமைப்புசாராத தொழிலாளர்கள் என்பதிலிருந்தே கரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவில் அமைப்புசாராத தொழிலாளர்களின் வாழ்வில் எத்தகைய மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ளலாம். உலக அளவில் மொத்தமுள்ள தொழிலாளர்களில் ஐந்தில்  நான்கு பங்கினர், அதாவது 81 விழுக்காட்டினர் கரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்படுவார்கள் என பன்னாட்டு தொழிலாளர்கள் அமைப்பு (ILO) வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 
 

இந்தியா, பிரேசில், நைஜீரியா ஆகிய நாடுகளில்தான் ஊரடங்கால் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர் என எச்சரித்துள்ள பன்னாட்டு தொழிலாளர்கள் அமைப்பு, இந்தியாவில் மட்டும் 40 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலைகளை இழந்து வறுமையில் வாடக்கூடும் என்றும் கூறியுள்ளது. இதேநிலை இந்த ஆண்டு முழுவதும் நீட்டிக்கக்கூடும் என்றும், 2020-ஆம் ஆண்டின் இறுதியில் நிலைமை மேலும் மோசமாகக்கூடும் என்றும் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு கணித்துள்ளது.

கரோனா வைரஸ் தாக்குதல் இந்திய பொருளாதாரத்தின் மீதும், வேலைவாய்ப்பின் மீதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை இந்திய அரசும் உணர்ந்திருந்தது. ஆனால், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இதுவரையில் இல்லாத அளவுக்கு இவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று இந்திய அரசு உள்ளிட்ட எந்த நாட்டு அரசும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. 40 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் வேலை இழந்தால் அவர்களின் வாழ்வாதாரம் பறிபோவது மட்டுமின்றி, இந்தியப் பொருளாதாரமும் உடனடியாக சரி செய்ய முடியாத அளவுக்கு மோசமான பின்னடைவுகளை சந்திக்கும்.

 

nakkheeran app

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், அதன் பரவலை தடுப்பதும், முற்றிலுமாக ஒழிப்பதும்தான் உலக நாடுகளின் முதல் கடமையாக இருக்க வேண்டும். அக்கடமையை இந்திய அரசும், தமிழக அரசும் நன்றாகவே செய்து வருகின்றன. அத்துடன் நிவாரண உதவி, பொருளாதார புத்துயிரூட்டல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டால் மட்டும்தான் வறுமை மற்றும் பட்டினியைப் போக்க முடியும். அதற்காக, முதற்கட்டமாக பாதிக்கப்படும் அமைப்புசாராத தொழிலாளர்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குதல், அடுத்தக்கட்டமாக அமைப்புசாரா தொழில்துறையில் ஏற்பட்ட பாதிப்புகளைப் போக்குவதன் மூலம், அத்துறையை பழைய நிலைக்கு திருப்பி, அதன் மூலம் வேலையிழந்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்தல் ஆகிய 2 கட்ட நடவடிக்கை மூலம்தான் இந்தியப் பொருளாதாரத்தில் கரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்புகளை போக்க முடியும்.
 

கரோனா வைரஸ் அச்சம் பரவத் தொடங்கிய சில நாட்களிலேயே, அதாவது மார்ச் 26-ஆம் தேதி  அடித்தட்டு மக்களுக்கு அரிசி, நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு நிவாரண உதவிகளை மத்திய அரசு அறிவித்தது. கரோனா வைரசின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை கணக்கிடுவதற்கு முன்பே அறிவிக்கப்பட்ட இந்த நிவாரண உதவிகள் போதுமானவையாக இருக்காது. வேலை இழந்த அமைப்புசாரா தொழிலாளர்களில் ஒரு பிரிவினருக்கு மட்டும்தான் இந்த உதவிகள் கிடைக்கும். பிற தொழிலாளர்களுக்கு இந்த உதவிகள் கிடைக்காது. அமைப்புசாரா தொழிலாளர்கள் மிகக்குறைந்த  ஊதியத்தில் பணியாற்றுபவர்கள். வேலை இழந்த ஒரு சில நாட்களிலேயே அவர்களின் சேமிப்புகள் கரைந்திருக்கும் என்பதால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பட்டினியில் வாடிக்கொண்டிருக்கக்கூடும். அவர்களின் பசியைப் போக்கும் வகையில் அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் பயனளிக்கும்  வகையில் நிவாரண உதவித் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக அறிவித்து செயல்படுத்த வேண்டும்.
 

அடுத்தக்கட்டமாக அமைப்புசாரா தொழில்களுக்கு புத்துயிரூட்டுவதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும். அமைப்புசாரா தொழில்கள் ஏராளமாக இருந்தாலும் கூட, அவற்றில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்தான் மிகவும் முக்கியமானவையாகும். இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் பங்களிப்பு நான்கில் ஒரு பங்கு. அதுமட்டுமின்றி, 50 கோடி தொழிலாளர்களுக்கு  சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும். அந்தத் துறைக்கு புத்துயிரூட்டினாலே இந்திய பொருளாதாரம் புத்தெழுச்சி பெறும் என்பதால் சிறு, குறு மற்றும் நடுத்தர  தொழில் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள், கடனுதவி உள்ளிட்ட சலுகைத் திட்டங்களை அறிவிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.  ஒருபுறம் கரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளையும், மறுபுறம் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதன் மூலம் கரோனா வைரஸ் நோயால் ஏற்பட்ட அனைத்து பாதிப்புகளையும் முழுமையாக போக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.