சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு காவல் நிலையத்திற்குட்பட்ட தேத்தான்பட்டி கிராமத்தில், கடந்த 31ம் தேதி பின்னிரவில் வெளிநாட்டில் பணியிலிருக்கும் அம்பலமூர்த்தியின் மனைவி சாந்தி என்பவர் குளோராபார்ம் எனும் மயக்கமருந்து கொடுத்து கொல்லப்பட்டதும், அவரிடமிருந்து செயின், வளையல் உட்பட 15 பவுன் கொள்ளையடிக்கப்பட்டதும் தெரியவர சுறுசுறுப்பாக இயங்கியது காரைக்குடி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கார்த்திக்கேயன் தலைமையிலான டீம்.
கதவை உடைத்து திருடும் கும்பல் தான் என ஆரம்பத்திலேயே உறுதிசெய்த காவல்துறை, உள்ளூரிலுள்ள எவருடைய உதவி இல்லாமல் இந்த ஆதாயக்கொலை நடந்திருக்க வாய்ப்பில்லை என முடிவு செய்து அருகிலுள்ள கிராமத்திலுள்ள முன்னாள் குற்றவாளிகளை நெருங்க, முதலில் அரண்மனைப்பட்டியை சேர்ந்த ரைஸ்மில் சந்திரன் சிக்கியுள்ளார். அதன்பின் ஆதாயக் கொலையின் முதன்மைக் குற்றவாளியான திண்டுக்கல்லை சேர்ந்த ராஜா சேகரனை கைது செய்து விசாரிக்க, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா என இருமாநிலங்கள் தேடும் மிகப்பெரிய கொள்ளைக் கும்பலின் தலைவனே அவன் தான்.! அவன் மீது 40க்கும் மேற்பட்ட வழக்குகள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. இத்தனைக்கும் அவனுடைய வயது 25 என்பது குறிப்பிடத்தக்கது.
" மதுரை ஜெயிலிலிருக்கும் போது அங்குள்ள சிறைக்கூட்டாளியான அய்யப்பனின் தொடர்பு ஏற்பட அவரின் மூலம் அரண்மனைப்பட்டி சந்திரனின் தொடர்பு அறிமுகமானது. ஏதாவது ஹவுஸ் புரோக்கிங்க் இருந்தால் கூறுங்கள். வருவதில் செலவு போக பாதி.! பாதி.!! என கூறி வைக்க, இங்கு கொள்ளையடித்தால் சுமார் 70 பவுனாவது தேறூம் எனக்கூறி தனியாக இருக்கும் சாந்தியின் வீட்டைக் காண்பித்தார் அவர். சம்பவத்தின் முந்தைய இரவில் திருச்சியிலிருந்து டூவீலரிலேயே வந்து வீட்டிற்குள் ஏறிக்குதித்து கதவை உடைக்க ஆரம்பித்தேன். சப்தம் கேட்டதால் வெளியில் வந்து எட்டிப்பார்த்த சாந்தி, ஏதும் அறியாததால் திரும்ப வீட்டினுள் சென்று விட்டார். மறுபடியும் கதவை உடைத்து வீட்டிற்குள் உள் நுழைந்து படுக்கையறை அருகிலேயே சுமார் 1 மணி நேரமாக நின்று கொண்டிருந்தேன். சரியாக 3 மணிக்கு அந்தக் கதவை தட்ட வெளியில் வந்தார் சாந்தி. இது தான் தருணமெனக் கையில் வைத்திருக்கும் குளோரோபார்மைக் கொண்டு முகத்தில் வைத்து மயக்கமடைய செய்து நகைகளைக் கொள்ளையடித்தேன். அதன் பிறகு தேடிப்பார்த்தேன். ஏதும் சிக்காததால் புறப்பட்டுவிட்டு விட்டேன். கையில் கிடைத்த நகைகளை பழனியில் விற்று ஆளுக்குப் பாதியாக பிரித்துக்கொண்டோம். இப்பொழுது சந்திரன் போலீஸிடம் மாட்டியதால் நானும் மாட்ட வேண்டியதாயிற்று." என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த ராஜசேகரனை திருச்சி சிறைச்சாலைக்கு அனுப்பியுள்ளது காரைக்குடி துணை சரக காவல்துறை.
திண்டுக்கல் வடக்கு மற்றும் தெற்கு, மதுரை அவனியாபுரம். கூடல் நகர், காங்கேயம், அருப்புக்கோட்டை, பூந்தமல்லி, திருவல்லிக்கேணி மற்றும் கர்நாடகவில் குண்டல்பேட்டை, மாண்டியா உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் மொத்தமாக 40 வழக்குகள் உள்ளன கைதான ராஜசேகர் மீது. இதில் விருதுநகர் மாவட்டத்திலும், சென்னையிலுமாக இரு குண்டர் தடுப்பு வழக்குகளும் உள்ளது. கர்நாடகாவில் இவனுடைய கூட்டாளிகளான ரவி, மணி மற்றும் சைலு-வினை தற்பொழுது வரை போலீசார் தேடிவருவது குறிப்பிடத்தக்கது.