கடந்த 10 நாட்களில் அடுத்தடுத்து 4 கர்ப்பிணிகள் அரசு மருத்துவமனையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து பிரசவத்திற்காக அதிகமாக கர்ப்பிணிகள் வரும் மருத்துவமனை, புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனை. ஒவ்வொரு நாளும் 10 முதல் 20 பேருக்குப் பிரசவம் நடக்கிறது. சிலர் சுகப்பிரசவம் என்றாலும், பலருக்கு அறுவை சிகிச்சை மூலமே பிரசவம் நடக்கிறது. எப்போதாவது ஒருவருக்கு அறுவை சிகிச்சையின்போது பிரச்சனை ஏற்பட்டால், தஞ்சை ராஜாமிராசுதார் மருத்துவமனைக்கு அனுப்புவது வழக்கம்.
ஆனால், கடந்த 10 நாட்களில் சுமார் 4 கர்ப்பிணிப் பெண்கள் மரணமடைந்திருப்பதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 நாட்களுக்கு முன்பு வாராப்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் பலியானார். அதனைத் தொடர்ந்து ஆலங்குடி கல்லாலங்குடியைச் சேர்ந்த செந்தில்வடிவு 17ஆம் தேதி பிரசவத்திற்காக சேர்ந்து, மதியம் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்த பிறகு, மாலையில் இறந்துள்ளார்.
அதேபோல மேலவிடுதி கிராமத்தைச் சேர்ந்த அனுராதா (26), 18ஆம் தேதி ராணியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டு, 20ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்த அடுத்த 2 மணி நேரத்தில் தஞ்சை ராசாமிராசுதார் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அங்கே இறந்துள்ளார். இருவரது குழந்தைகளும் நலமாக உள்ளனர்.
அதேபோல கைக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த வீரன் மகள் ராணி (25). இவரை பொள்ளாச்சியில் முத்துக்குமாருக்கு திருமணம் செய்துகொடுத்து 2 குழந்தைகள் உள்ள நிலையில், ராணியார் மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்டவருக்கு, தற்போது உடல்நலக்குறைவு என்று தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பரிசோதனையில் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்ட ராணி, மீண்டும் கர்ப்பமடைந்திருப்பது தெரியவந்துள்ளது. அதனால் ராணியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு நேற்று அறுவை சிகிச்சை செய்தபோது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால், மருத்துவர்களின் கவனக்குறைவால்தான் ராணி இறந்திருக்கிறார் என்று ராணியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் புகாரும் கொடுத்துள்ளனர்.