கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதிக்கு அருகே உள்ள கிருஷ்ணா காலனியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது கணவரான வெங்கடேசன் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இந்நிலையில், தனது வீட்டில் தனியாக இருக்கும் ராஜேஸ்வரி, ரியல் எஸ்டேட் தொழிலை செய்து வந்துள்ளார்.
தன்னுடைய தொழில் காரணமாக பல்வேறு ஊர்களுக்குச் சென்று வரும் ராஜேஸ்வரிக்கு, சிங்காநல்லூரைச் சேர்ந்த வர்ஷினி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணும் ரியல் எஸ்டேட் தொழிலை செய்து வந்ததால், இவர்களுடைய நட்புறவு நெருக்கமானது. இருவரும் ஒன்றாகச் சேர்ந்து தொழில் செய்து வந்துள்ளனர். அதன்பிறகு, வர்ஷினி தனக்குத் தெரிந்த இடைத்தரகர்கள் எனக்கூறி அருண்குமார், சுரேந்திரன், பிரவீன் என மூன்று பேரை ராஜேஸ்வரிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். நாளடைவில் இவர்கள் அனைவரும் ஒன்றாகத் தொழில் செய்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதியன்று, வர்ஷினி மற்றும் அந்த மூன்று இடைத்தரகர்களும் ராஜேஸ்வரியின் வீட்டிற்கு வந்து உணவு சாப்பிட்டுள்ளனர். மேலும், அது இரவு நேரம் என்பதால் அவர்கள் அனைவரும் ராஜேஸ்வரியின் வீட்டிலேயே தூங்கச் சென்றுள்ளனர். அப்போது, நள்ளிரவு 12.30 மணியளவில் திடீரென கண் விழித்த வர்ஷினி மற்றும் அவரது 3 நண்பர்களும், ராஜேஸ்வரி தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் அவரது பெட் ரூமில் இருந்த நூறு பவுன் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் இரண்டரை கோடி ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துக்கொண்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளனர்.
இதையடுத்து, அடுத்த நாள் காலை ராஜேஸ்வரி கண் விழித்து பார்த்தபோது, வர்ஷினியும் அவரது நண்பர்களும் அங்கு காணவில்லை. அப்போது சந்தேகமடைந்த ராஜேஸ்வரி, தனது பீரோவை திறந்து பார்த்தபோது, அதிலிருந்த தங்க நகைகள் பணங்கள் என அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி, என்ன செய்வது எனத் தெரியாமல் கண்ணீர்விட்டு கதறிய நிலையில், வர்ஷினி மற்றும் அவரது மூன்று நண்பர்கள் மீது இராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய போலீசார், தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர். மேலும், போலீசாரின் தேடுதல் வேட்டையில், பத்து நாட்களுக்குப் பிறகு திருவள்ளூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் பதுங்கியிருந்த அருண்குமார், சுரேந்திரன் மற்றும் பிரவீன் ஆகிய மூன்று பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 33 லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தையும் 31 பவுன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
அப்போது, அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், "கொள்ளையடித்த பணத்தில் வர்ஷினி, கார்த்திக், அருண்குமார், சுரேந்திரன், நவீன்குமார் மற்றும் பிரவீன் ஆகிய 6 பேரும் பங்கு போட்டுக்கொண்டு ஆளுக்கொரு மூலையில் தலைமறைவானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 6 ஜோடி தங்க வளையல்கள், 20 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் என பிரித்துக்கொண்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அருண்குமார், சுரேந்திரன் மற்றும் பிரவீன் ஆகிய மூன்று பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், தலைமறைவாக இருக்கும் வர்ஷினி, கார்த்திக் மற்றும் நவீன்குமார் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். தற்போது, பெண்ணிடம் நட்பாக பழகிய கொள்ளை கும்பல், வீட்டுக்குள் இருந்த தங்க நகைகளையும் ரொக்கப் பணத்தையும் மொத்தமாகச் சுருட்டிச் சென்ற சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.