மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் இறுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “மதுரையில் நேற்று 14 ஆயிரம் பேருக்குச் செய்த கரோனா பரிசோதனையில் 74 பேருக்கு மட்டுமே தொற்று என வந்துள்ளது. இரண்டாம் அலை கட்டுக்குள் வந்துள்ள நிலையில் மூன்றாம் அலையைக் கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இரண்டாம் அலையின் போது மருத்துவ உள் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டது. மதுரையில் மூன்றாம் அலையை எதிர்கொள்ள முன் மாதிரியாக பைலட் புராஜக்ட் ஒன்றை உருவாக்க உள்ளோம். தடுப்பூசி குறைவாகச் செலுத்தப்பட்ட பகுதிகள், முதியோர், இளைஞர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மூன்றாம் அலையில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. தடுப்பூசி செலுத்திய பகுதிகளில் மூன்றாம் அலை வர வாய்ப்பு இல்லை. எங்கே மூன்றாம் அலை வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. கோவின் செயலி ஒன்றிய அரசின் செயலி என்பதால் மாநில அரசிடம் தடுப்பூசி குறித்த தகவலும் இல்லை. தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரங்கள் ஒன்றிய அரசிடம் மட்டுமே உள்ளது. யாருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது போன்ற விவரங்களை மாநில அரசிடம் ஒன்றிய அரசு வழங்கவில்லை. தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரங்களை ஒன்றிய அரசிடம் கோர உள்ளோம்.
மேலும், மதுரையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது தொடர்பான விவரங்களை நாளை முதல் மாவட்ட நிர்வாகம் சேகரிக்க உள்ளது. தடுப்பூசி செலுத்தும் விவரங்களை அனைத்து இடங்களுக்கும் பகிர்வது தான் கூட்டாட்சி தத்துவம். தமிழகத்தில் முதன்முறையாக மதுரையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுபவர்களின் விபரங்களைக் கோவின் இணையதளம் போன்று சேகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். எந்த தடுப்பூசியை யார் பயன்படுத்துவது என்பதில் மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபாடு இருக்கக் கூடாது. தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரங்களை ஒன்றிய அரசு வழங்கினால் மூன்றாவது அலையை எளிதில் கட்டுப்படுத்த முடியும். ஒரு திட்டத்தை ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி செயல்படுத்தினாலும், திட்டத்தின் முழு தகவல்கள் ஒன்றிய அரசிடம் மட்டுமே இருக்கும். ஒன்றிய அரசிடம் உள்ள தகவல்களை மாநில அரசுக்குக் கொடுத்தால் தான் நடவடிக்கைகள் எடுக்க முடியும், இதுவே கூட்டாட்சி தத்துவம்.
ஒவ்வொரு மாநில அரசும் தனித்தனியாகத் தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ள முடியாது, யார் யார் எந்தெந்த தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ளலாம் என ஒன்றிய அரசு கூற வேண்டும். ஒன்றிய அரசு ஸ்புட்னிக் வி தடுப்பூசியைக் கொள்முதல் செய்து கொடுத்தால் மக்களுக்கு இலவசமாக வழங்கத் தயாராக உள்ளோம்” எனக் கூறினார்.