தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் பட்டத்தூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முத்துநாதன் (வயது 40). இவருக்குத் திருமணமாகவில்லை. இவருக்கு அவரது கிராமத்தை ஒட்டியுள்ள புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் மேற்பனைக்காடு அருகே உள்ள ஆயக்குடி கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது. ஆழ்குழாய் கிணறு இல்லாததால் மானாவாரி விவசாயம் தான். ஆனால் தினசரி தனது வீட்டில் நிற்கும் ஆடு, மாடுகளைத் தனது தோட்டத்திற்கு ஓட்டி வந்து மேய்த்துச் செல்வார்.
வழக்கம்போல நேற்று மாலை ஆடு மாடுகளை மேய்த்து வீட்டிற்கு ஓட்டிச் சென்று கட்டிவிட்டுத் தனது நண்பருடன் கீரமங்கலம் சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் இன்று காலை அவரது தோட்டத்தில் அவரது பைக் நிறுத்தப்பட்டிருந்த இடத்திலிருந்து 30 மீட்டர் தூரத்தில் தலை, கை என உடலில் பல இடங்களிலும் வெட்டுப்பட்டு ரத்தம் வெளியேறி சடலமாகக் கிடந்ததை சிலர் பார்த்துள்ளனர்.
உடனே போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அறந்தாங்கி போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தேடியும் கொலையாளி யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அங்கு வந்த அவரது உறவினர்கள் 'ஒரே குடும்பத்தில் இப்படி 3வது ஆளையும் கொன்னுட்டாங்களே' என்று கதறி அழுதனர். இது குறித்து அங்கிருந்த உறவினர்கள் கூறும்போது, நேற்று இரவு மேற்பனைக்காட்டைச் சேர்ந்த அவரது நண்பருடன் கீரமங்கலம் சென்று இரவு 9 மணிக்கு பிறகு மேற்பனைக்காடு வந்ததை சிலர் பார்த்துள்ளனர். அதன் பிறகு வழக்கம் போல வீட்டுக்கு வராமல் எப்படி தோட்டத்திற்கு சென்றார்; யார் அழைத்துச் சென்றது என்பதும் அங்கே எத்தனை பேர் அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் தயாராக இருந்தனர் என்றும் தெரியவில்லை.
மண் பாதையிலிருந்து தோட்டத்திற்கு பைக்கில் செல்ல வழி இருந்தும் ஏன் சற்று தூரத்திலேயே பைக்கை நிறுத்தி இருந்தார் என்று தெரியவில்லை. கொலையாளிகள் அவரை விரட்டியதால் பயத்தில் பைக்கை நிறுத்திவிட்டு தப்பி ஓடும்போது விரட்டி விரட்டி வெட்டி சாய்த்திருக்கிறார்கள். செல்போனும் காணவில்லை என்றனர். இத்தனைக் கொடூரமாக விவசாயியை வெட்டிக் கொன்ற மர்ம கும்பலை அறந்தாங்கி போலீசார் தேடி வருகின்றனர்.