சென்னை மணலி புதுநகர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மலையை உடைக்க பயன்படுத்தும் சுமார் 500 டன் அளவு கொண்ட வெடி பொருட்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரிகள் புகுந்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து போலீசார் லாரிகளை அப்புறப்படுத்தினர்.
தனியாருக்கு சொந்தமான இடத்தில் வெடிபொருள் நிரப்பப்பட்ட கன்டெய்னர்கள் கொண்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் நேற்று நள்ளிரவு நேரத்தில் ஏராளமான போலீசார் அந்த தனியார் கிடங்கில் தீவிர சோதனை நடத்தினர்.
அதன் பிறகு சட்ட விரோதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் அடங்கிய கன்டெய்னர் லாரிகளை போலீசார் அடையாளம் கண்டனர். மழை பெய்து கொண்டிருந்த நேரத்திலும் போலீசார் துரிதமாக செயல்பட்டு லாரிகளை அப்புறப்படுத்தினர். யார்டு உடைய உரிமையாளர் சுகுமாரன் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வெடி பொருட்களை நாக்பூரில் இருந்து ஏற்றி வந்து சென்னை துறைமுகத்தில் கப்பலில் ஏற்றி துருக்கி நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கான அனுமதி தனக்கு இருப்பதாக சுகுமாரன் தெரிவித்தார். உரிய அனுமதி இல்லாமல் ஒரு இடத்தில் இவ்வளவு வெடி பொருட்களை வைக்க கூடாது என எச்சரித்த போலீசார் 38 லாரிகளையும் பத்திரமாக அப்புறப்படுத்தினார்.
மத்திய சுங்க துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கான்கார்டு யார்டுக்கு லாரிகளை மாற்றினர். சுங்கத் துறையின் யார்டில் லாரிகளை நிறுத்தி வைக்க ஒரு நாளைக்கு ஒரு லாரிக்கு நான்காயிரம் ரூபாய் வாடகை வசூலிக்கப்படுகிறது. இதற்கான வாடகை தொகையை வெடிபொருள் நிறுவனமே வழங்கி விடுகிறது. ஆனால் தனக்கு சொந்தமான இடத்தில் லாரிகளை நிறுத்திவிட்டால், அந்த வாடகையை தானே எடுத்துக் கொள்ளலாம் என சுகுமாரன் இவ்வாறு செய்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. சுகுமாரன் மீது அனுமதியின்றி கவனக்குறைவாக வெடி பொருட்களைக் கையாண்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.