தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ச்சியாக கைது செய்யப்படும் சம்பவங்கள் அண்மையாகவே தொடர்ந்து வருகிறது. தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக மத்திய அரசு ஊழிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் தமிழக முதல்வரும் பலமுறை மத்திய அரசுக்கு வலியுறுத்தி கடிதங்களை எழுதி வருகிறார்.
இந்நிலையில் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 37 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாகை, மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை நெடுந்தீவு பகுதிக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக மூன்று விசைப்படகுகளை பறிமுதல் செய்ததோடு, 37 மீனவர்களை கைது செய்துள்ளனர்.
கைதான 37 பேரும் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு நடத்தப்படும் விசாரணைக்கு பின் மீனவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.