தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் அதற்கான கொண்டாட்டத்திற்காக மக்கள் தயாராகி வருகின்றனர். தங்களுக்குத் தேவையான புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காகக் கடைவீதிகளில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் பொழுது கரோனா கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்த நிலையில், இந்த முறை பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல 16,540 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகத் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. பண்டிகை முடிந்து மீண்டும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு மக்கள் திரும்ப 17,719 பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. மொத்தமாக 34,259 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. நவ்.1 ஆம் தேதியிலிருந்து 3 ஆம் தேதி வரை சென்னையில் மட்டும் 9,806 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இதுவரை 72,597 பேர் முன்பதிவு செய்துள்ளனர் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.