தேர்தல் நடத்தை விதிகளின்படி கலவரங்கள் நடக்க மதுவும் மிக முக்கிய காரணமாகிறது என்பதால் தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன்பே மதுக்கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி திங்கள்கிழமை இரவு 10 மணியுடன் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக கணக்கு காட்டிவிட்டு நள்ளிரவு தாண்டியும் பெட்டி பெட்டியாக மது விற்பனை நடந்தது.
அதேபோல புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல் நிலைய எல்லையில் உள்ள கல்லுப்பள்ளம் என்ற கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் அனுமதி இல்லாமல் மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னத்துரை என்ற அ.தி.மு.க பிரமுகர் நடத்தி வரும் பாரில் ஏராளமான மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அந்த பாட்டில்கள் தேர்தல் நாளில் வாக்காளர்களுக்கு கொடுக்கவா? அல்லது கூடுதல் விலைக்கு விற்பனை செய்யவா என்பது தெரியவில்லை என்று அந்த பகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கொடுத்துள்ளனர்.
நள்ளிரவை தாண்டிய பிறகு சம்மந்தப்பட்ட அனுமதியில்லாத பாரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சீனிவாசன், மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டபோது அதில் 112 பெட்டிகளில் பல்வேறு ரகங்களில் 3031 மது பாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்து அனைத்தையும் அள்ளிச் சென்று ஆலங்குடி மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆனால், ஆலங்குடி மதுவிலக்கு போலீசார், மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த நபர்கள் ஓடிவிட்டனர். யாருடையது என்பது தெரியவில்லை என்று தெரிவித்தனர். சின்னத்துரை அ.தி.மு.க பிரமுகர் என்பதால் அவர் மீது மேலிட அழுத்தம் காரணமாக வழக்கு பதிவு செய்ய மறுத்து வருகின்றனர் என்கின்றனர் அந்த பகுதி மக்கள்.
இது குறித்து கல்லுப்பள்ளம் இளைஞர்கள் கூறும்போது, “இது புதுக்கோட்டை மதுவிலக்கு போலீசார் பார்வையில் உள்ள டாஸ்மாக் கடை. அதனால் இதுவரை மாத மாமூல் கொடுத்த சின்னதுரை தேர்தல் நேரத்தில் விடுமுறையில் மது விற்பனை செய்வதால் ஒரு நாளைக்கு மதுவிலக்கு போலீசாருக்கு மட்டும் சுமார் ரூ. 25 ஆயிரம் வரை மாமூல் பேசி உள்ளார். அதேபோல சம்மந்தப்பட்ட காவல் நிலையம் மற்றும் அதிகாரிகளுக்கும் மற்ற துறை சார்ந்தவர்களுக்கும் வழக்கமாக கொடுக்கும் மாமூலைவிட 3 விடுமுறை நாட்களுக்கும் கூடுதல் மாமூல் கொடுக்கிறார். அதனால்தான் அவர் பெயரை வழக்கில் சேர்க்க தயக்கம். இனி யாராவது ஒரு வேலைக்காரரை மது பாட்டில்களை பதுக்கி வைத்ததாக வழக்கு போட்டு முடித்துக் கொள்வார்கள். திருடனை தப்பவிட்டு யாரோ ஒருவரை ஒரு நாள் சம்பளம் வாங்கும் நபரை பிடிக்கிறதுக்கு தான் போலீசார்” என்று நொந்து கொண்டனர்.